ETV Bharat / state

சென்னை மாநகராட்சியின் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. முழு விவரம்

author img

By

Published : Nov 1, 2022, 10:26 AM IST

சென்னை மாநகராட்சியின் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. முழு விவரம்
சென்னை மாநகராட்சியின் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. முழு விவரம்

சென்னை மாநகராட்சி சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக காணலாம்.

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன்படி, நேற்று (அக் 31) இரவு முதலே சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது.

இதனை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். அதேநேரம் சென்னை மாநகராட்சி தரப்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறை: பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் உள்ள மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில், 24 மணிநேரமும் பணிபுரிய சுழற்சி முறையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் 4 அலுவலர்கள், துணை ஆட்சியர் நிலையில் 3 அலுவலர்கள், 3 செயற்பொறியாளர்கள் மற்றும் 54 இதர நிலையிலான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இதர சேவைத் துறைகளான சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீகரற்று வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் நீர்வளத்துறை ஆகிய துறைகளைச் சார்ந்த புகார்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய துறைகளின் அலுவலர்களும் கட்டுப்பாட்டு அறையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புகார் எண்கள்: மழைநீர் தேக்கம், சாய்ந்த மரங்கள் மற்றும் மரக்கிளைகள் எரியாத தெருவிளக்கு மின்கம்பங்கள், மின்சாரப் பெட்டிகள் மற்றும் மின்கம்பங்களில் ஏற்படும் மின்கசிவு, மின் இணைப்பு துண்டிப்பு, குடிநீர் விநியோகம், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருதல், சாலை மற்றும் தெருக்களில் வெளியேறும் கழிவுநீர் உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து மக்கள் புகார்களைத் தெரிவிக்க 10 இணைப்புகளுடன் கூடிய 1913 என்ற உதவி எண்ணும், 044-2561 9206. 044-2561 9207 மற்றும் 044-2561 9208 ஆகிய தொலைபேசி எண்களும், 94454 77205 என்ற வாட்ஸ் ஆப் செயலியும் செயல்பட்டு வருகிறது.

கண்காணிப்பு கேமராக்கள்: சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகள், நீர்வழிக் கால்வாய்கள், ஏரிகள் மற்றும் கடல் முகத்துவாரங்களில் பொருத்தப்பட்டுள்ள 68 கண்காணிப்பு கேமராக்களின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வெள்ள உணரிகள் (Flood Sensors): பருவமழைக் காலங்களில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் 22 சுரங்கப்பாதைகள் மற்றும் நீர்வழிக் கால்வாய்களில் செல்லும் வெள்ள நீரின் அளவினை அறிய 38 இடங்களில் வெள்ள உணரிகள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் ஏதேனும் ஒரு பகுதியில் அல்லது ஏதேனும் ஒரு இடத்தில் வெள்ளப் பாதிப்பு அதிகமாக இருப்பின், உடனடியாக தொடர்புடைய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உடனடியாக பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள முடியும்.

மழைமானி (Rain Gauge): சென்னையில் பொழியும் மழையின் அளவினை கண்டறிய மாநகராட்சியின் சார்பில் ஒரு மண்டலத்திற்கு இரண்டு என 15 மண்டலங்களில் 30 மழைமானிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தந்தப் பகுதிகளில் பொழிகின்ற மழையின் அளவினை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.

மின்மோட்டார்: பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக இல்லாமல் இணைப்பு பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த இணைப்பு பகுதிகளை மையப்படுத்தி 719 மின்மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு குதிரை திறனிலிருந்து நூறு குதிரைத்துடன் வரை இருக்கக்கூடிய மின் மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒவ்வொரு மின்மோட்டோர்களும் அதிநவீனம் வாய்ந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தேங்கிய மழைநீரை நிமிடம் ஒன்றுக்கு 11,700 லிட்டர் தண்ணீரை வெளியிட்ட வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.