ETV Bharat / state

நிதி முறைகேடு - தக்‌ஷின் பாரத் இந்தி பிரசார சபை நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு!

author img

By

Published : Jan 24, 2023, 8:25 PM IST

நிதி முறைகேடு புகாரில் தக்‌ஷின் பாரத் இந்தி பிரசார சபையின் முன்னாள் தலைவர் நிரல் கோட்டி, தற்போதைய நிர்வாகிகள் உள்ளிட்டப் பலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

Cbi fir
Cbi fir

சென்னை: தென்னிந்தியாவில் இந்திப் பேச தெரியாத நபர்களுக்கு இந்தி மொழியை பயிற்றுவிப்பதற்காக 'தக்‌ஷின் பாரத் இந்தி பிரசார சபை' என்ற கல்வி நிறுவனத்தை, கடந்த 1964ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த அமைப்பு இந்தி மொழியை வளர்க்கும் வகையிலும், இந்தி கற்பவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புகளை நடத்தி சான்றிதழ் வழங்கி வருகிறது. இலவச இந்தி வகுப்புகளும் நடத்தி வருகிறது.

இந்த அமைப்பிற்கு தென்னிந்தியாவில் ஹைதராபாத், தர்வாத், எர்ணாகுளம், திருச்சி ஆகிய நான்கு இடங்களில் மண்டல அலுவலகங்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் கடலூர், நெய்வேலி, புதுச்சேரி, கோவை, சேலம் உள்ளிட்ட 14 கிளை அலுவலகங்களும் உள்ளன.

இதனிடையே தக்‌ஷின் பாரத் இந்தி பிரசார சபைக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகப் புகார் எழுந்தது. குறிப்பாக 2004-2005 நிதியாண்டு முதல் 2016-2017 நிதியாண்டு வரை, இந்த அமைப்பின் தலைவராக இருந்த மறைந்த நிரல்கோட்டி மற்றும் அவரது மகன் சிவயோகி ஆகியோர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த டிசம்பர் மாதம் 2021ஆம் ஆண்டு மத்திய கல்வித்துறையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறைப் பிரிவில், அமைப்பின் இணைச்செயலாளர் நீதா பிரசாத் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், சிபிஐ அதிகாரிகள் இந்தி பிரச்சார சபையின் மதுரைக் கிளையில் விசாரணை நடத்தினர்.

இதில், மத்திய அரசு வழங்கிய 5.78 கோடி ரூபாய் நிதியை இந்தியை வளர்ப்பதற்கு பயன்படுத்தாமல், பிற படிப்புகளை மேம்படுத்த பயன்படுத்தியதும், வரவு செலவு தொடர்பாக போலி ஆவணங்களை சமர்ப்பித்து நிதி முறைகேடு செய்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில், மதுரையில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தக்‌ஷின் பாரத் இந்தி பிரச்சார சபை முன்னாள் தலைவர் நிரல் கோட்டி, செயல் தலைவராக இருந்த அவரது மகன் சிவயோகி மற்றும் பல அரசு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: காங்கிரசுக்கு கை கொடுப்பாரா கமல்ஹாசன்; நாளை கூடுகிறது மநீம செயற்குழு கூட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.