ETV Bharat / state

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு விரைவில் பணப் பயன்கள்!

author img

By

Published : Dec 21, 2020, 10:45 PM IST

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப் பயன்கள்!
ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப் பயன்கள்!

ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உண்டான பணப்பலன்கள் விரைவில் வழங்கப்படும் என தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற 1600 நபர்களுக்கு பணப் பயன்கள் விரைவில் வழங்கப்படும் என போக்குவரத்துக் கழக மூத்த அலுவலர் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டைச் சேர்ந்த எட்டு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு, கடந்த 2019 ஏப்ரல் முதல் பணிக்கொடை, தொழிலாளர் வைப்பு நிதி, விடுப்பு சம்பளம், சமூகப் பாதுகாப்பு நிதி உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பல கட்ட போராட்டம் நடத்தினர். கரோனா பெருந்தொற்று காலத்திலும் இதற்காகப் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், போக்குவரத்துக் கழங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற 1600 நபர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படும் என்றும், இதற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துக் கழக மூத்த அலுவலர் கூறினார். இதற்கான அறிவிப்பாணை விரைவில் தமிழ்நாடு அரசிடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

2019-20ஆம் ஆண்டில் 6,222 ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பிற பணியாளர்கள் ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு 1,654 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும் எனவும்; அதேபோல் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு 600க்கும் மேற்பட்ட நபர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கான பலன்களும் இதுவரை வழங்கப்படவில்லை. தோராயமாக ஒரு தொழிலாளிக்கு 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டியுள்ளது. பல ஆண்டுகளாக போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றியவர்கள், தற்போது குழந்தைகளின் திருமணம், கல்வி, புதிய வீடு கட்டுவது, தொழில் தொடங்குவது, கடன்களை அடைப்பது போன்ற பல்வேறு தேவைகளுக்கான ஓய்வூதிப் பயன்களை நம்பியுள்ளனர்.

தற்சமயம் 2019 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும் பணப் பயன்கள் வழங்கப்படும் என்றும், மற்றவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வழங்கப்படும் என்றும் போக்குவரத்து துறை உயர் அலுவலர்கள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக ஓய்வு பெற்ற போக்குவரத்துக்கழக ஊழியர்கள் நலச் சங்க பொதுச் செயலாளர் கர்சன் பேசுகையில், "2019ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு பணப் பலன்கள் நீண்ட நாட்களாக கிடைக்கப்பெறவில்லை. இதற்காக தொழிலாளர் நலத்துறை ஆணையரிடம் முறையிட சென்றோம். இதுதொடர்பாக இன்று(டிச.21) போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கும் தொழிலாளர் நலத்துறை ஆணையருக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பணிக்கொடை, தொழிலாளர் வைப்பு நிதி, விடுப்பு சம்பளம், சமூகப் பாதுகாப்பு நிதி உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்குவதற்காக 445.96 கோடி ரூபாயும், 526.47 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

2020ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர்கள் 600க்கும் மேற்பட்டோர் இதற்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கும் பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அவர்களுக்கான பணப்பலன்களும் வழங்கப்படும் என தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் உறுதியளித்தனர்" என்று கூறினார்.

இதையும் படிங்க:பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.