ETV Bharat / state

தன்னாட்சி கல்லூரிகளில் மாதிரி பாடத்திட்டம்: தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு என்ன?

author img

By

Published : Aug 10, 2023, 9:06 PM IST

model-syllabus-in-autonomous-colleges-important-announcement-made-by-tamil-nadu-government
தன்னாட்சி கல்லூரிகளில் மாதிரி பாடத்திட்டம்: தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு என்ன?

தன்னாட்சி கல்லூரிகளில் மாதிரி பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அந்தந்த கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றிற்கு பொது பாடத்திட்டத்தினை தமிழ்நாடு உயர் கல்வித்துறை மூலம் உருவாக்கி நடப்பாண்டு முதல் அமல்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த பொது பாடத் திட்டத்தை உருவாக்கப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பாடத்திட்ட கருத்துகள் வகுக்கப்பட்டன.

இந்த பொதுப் பாடத்திட்டம் அரசு கல்லூரிகளில் பெரும்பாலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தன்னாட்சிக் கல்லூரிகள் இந்த பாடத்திட்டத்தை அமல்படுத்த முடியாது. இதனைத் தொடர்ந்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் தன்னாட்சி கல்லூரியின் நிர்வாகத்தினர் ஆலோசனை மேற்கொண்டனர்.

அப்போது தன்னாட்சிக் கல்லூரியியைச் சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே பொது பாடத்திட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். மற்றவர்கள் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் என்றால், அதில் தாங்கள் கூறும் மாற்றங்களை அமல்படுத்த வேண்டும்; அப்போதுதான் வரும் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்துவோம் எனத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுள்ளதாவது, 'உயர் கல்வித்துறை அமைச்சர் 26-8-2021 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தபடி, மாணவர்களின் அறிவு, திறன், கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை மேம்படுத்தவும், அவர்களை போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்தவும், தொழில் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் உயர் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்ட மறுசீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு, மாதிரி பாடத்திட்டங்கள் (Model Syllabus) உருவாக்கப்பட்டன.

மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, மாநிலத்திலுள்ள 90 சதவீத அரசு உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்லூரியின் தன்மைக்கேற்ப சில மாற்றங்களுடன் மாதிரிப் பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன. இந்நிலையில், மாதிரிப் பாடத்திட்டத்தின் நோக்கத்தினை விளக்க, உயர் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் 2.8.2023 அன்று சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைத்து தன்னாட்சிக் கல்லூரி முதல்வர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில், இந்த புதிய மாதிரி பாடத்திட்டம் 70 சதவீத தன்னாட்சிக் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது. சில தன்னாட்சிக் கல்லூரிகள், அவர்களது கல்லூரியில் தற்போது கற்பிக்கப்படும் பாடத்திட்டம் சிறப்பாக உள்ளதாகவும், இந்த மாதிரி பாடத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதால் அவர்களது கல்லூரி தன்னாட்சியின் உரிமைக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் கருதுவதாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. தன்னாட்சிக் கல்லூரிகள் சார்பாக தெரிவிக்கப்பட்ட கருத்துகள் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டன.

இதன்படி, தன்னாட்சிக் கல்லூரிகள் இந்த புதிய மாதிரி பாடத்திட்டத்தினை தங்களது கல்லூரிகளில் நடைமுறைப்படுத்திக் கொள்வது குறித்து அவர்களே தங்கள் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது' எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க :நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி... ஆட்சியை தக்கவைத்தது பாஜக!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.