ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் வருமா? வராதா?.. கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

author img

By

Published : Aug 4, 2023, 11:05 PM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1600 கோடி ரூபாய் முதலீட்டில் ‘ஃபாக்ஸ்கான் நிறுவனம்’ அமையுமா? அமையாதா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கேள்வி எழுப்பிய நிலையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இதற்கு பதிலளித்து முடித்துவைத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 'ஃபாக்ஸ்கான் ஹான் ஹாய் நிறுவனம்' 1600 கோடி ரூபாய் முதலீட்டில், மொபைல் போன் உதிரி பாகங்கள் அமைக்க முன் வந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானதாக பதிவிட்டிருந்தார். இதனால், தமிழ்நாடு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிரிக்கும் எனவும் அவர் அதில் பதிவிட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக இதற்கு "ஃபாக்ஸ்கான் இன்ட்ஸ்ரியல் இன்டர்நெட்" என்ற நிறுவனம் தமிழ்நாடு அரசோடு எந்த ஒரு ஒப்பந்தமும் போடவில்லை என மறுப்பு தெரிவித்திருந்தது. அதற்கான விளக்கமும் நிறுவனத்தின் சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது என அறிவித்தது. இதனால், ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் தனது முதலீடு செய்வது உறுதியா இல்லையா என்ற ஒரு குழப்ப சூழ்நிலையிலே சென்று கொண்டிருந்தது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். தமிழ்நாட்டில் ஒரு தொழில் நிறுவனம் தொடங்க வேண்டும் என்றால் இப்பொழுது இருக்கும் ஆட்சியாளர்களுக்கு கமிஷன் வழங்கினால் மட்டுமே தொடங்க முடியும் என அவர்களுக்கு தெரிந்தவுடனே, அவர்கள் முதலீடு செய்ய வேறு மாநிலத்தை நோக்கி சென்றுள்ளனர். இதற்கு பதிலளிக்க முடியாமல் தான் முதலமைச்சர் பதில் ஏதும் கூறாமல் அமைதி காத்து வருவதாகவும் அண்ணமாலை கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதாக கூறிய நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்யப்போவதாக சொன்ன தொகையைவிட மூன்று மடங்கு அதிகமாக வேறு மாநிலத்தில் முதலீடு செய்ய ஒப்பந்தம் அளித்துள்ளது. இதற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டுமென பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது அறிக்கை மூலமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

ஃபாக்ஸ்கான் நிறுவனம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “தமிழ்நாட்டில் ஒரு பன்னாட்டு நிறுவனம் முதலீடு செய்வதில் எதிர் அணியினருக்கு என்ன பிரச்னை என்பது தெரியவில்லை. இந்த ஆட்சியில் தமிழ்நாடு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துவிடப் போகிறது என்ற வயிற்றெரிச்சலில் பேசுகிறாரா என்பதும் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் ஹான் ஹாய் நிறுவனம் மூலமாக ஆயிரத்து 600 கோடி ரூபாய் முதலீடு நிச்சயம் வருகிறது. இதன் மூலம் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதும் உறுதி. ஆனால் ஒரு சில நாளிதழ்களில் வேறு நிறுவனத்தின் பெயர் மாறி வந்ததாலே இவ்வளவு பெரிய குழப்பமும். இதை வைத்தே எதிர் அணியினரும் எளிதாக அரசியல் ஆதாயம் தேடி கொள்ளலாம் எனவும் கற்பனையை வளர்த்து கொள்கின்றனர்.

ஒப்பந்தம் செய்த நிறுவனத்திடம் கேட்டால் தானே ஒப்பந்தம் செய்யப்பட்டதா இல்லையா என தெரியும். அதை விட்டு வேறு யாரிடமோ சென்று கேட்டால் அவர்கள் இல்லை என்ற பதிலை தான் கூறுவார்கள். மிகப்பெரிய முதலீட்டை தமிழ்நாட்டில் செய்யவுள்ள ஃபாக்ஸ்கான் குழும தலைவர் யங் லியு, தமிழ்நாட்டில் முதலீடு செய்யவுள்ளது தொடர்பாகவும் அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளதாகவும் அவரே செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்” என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அண்ணாமலையின் கேள்விக்கு பதிலளித்திருந்தார்.

இதையும் படிங்க: 'அதிமுகவை விமர்சித்தால் எதிர் விமர்சனங்களை சந்திக்க நேரிடும்' - அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.