ETV Bharat / state

அதிமுகவின் நடவடிக்கைக்கு துணை போகாமல் இருக்க வேண்டும்; வேலை நிறுத்தம் குறித்து அமைச்சர் சிவசங்கர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 6:36 PM IST

Minister Sivasankar spoke about the transport union strike
அமைச்சர் சிவசங்கர்

minister sivasankar: தேர்தல் நேரத்தில் அதிமுக இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. அதிமுகவின் நடவடிக்கைக்கு யாரும் துணைபோகாமல் இருக்க வேண்டும். அரசின் கஷ்டத்தையும், மக்கள் நலனையும் புரிந்துகொண்டு தொழிற்சங்கங்கள் இயங்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் நாளை திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் எனப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்குச் செய்யப்பட்டுள்ள சிறப்புப் பேருந்து ஏற்பாடுகள் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அப்போது போக்குவரத்துத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் குறித்த கேள்விக்கு, “நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். அவர்கள் இன்னமும் பேச்சுவார்த்தை நடத்துவதற்குக் காத்திருப்பதாகக் கூறி இருக்கிறார்கள். அதையும் மீறி எதுவும் நடவடிக்கை இருந்தால், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் போக்குவரத்தை சுமுகமாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

எதைச் செய்ய முடியும், எதைச் செய்ய முடியாது என ஏற்கனவே அவர்களுக்குத் தெரிவித்து உள்ளோம். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அவர்கள் செய்யாமல் விட்டதை இப்பொழுது திமுக ஆட்சி அமைந்த பிறகு செய்ய வேண்டும் என அதிமுக தொழிற்சங்கம் சொல்வதும், எடப்பாடி பழனிசாமி சொல்வதும் வேடிக்கையான ஒன்று. விந்தையிலும் விந்தையாக உள்ளது. அவர்களால் முடியாது என்று விட்டுவிட்டார்கள், அதை நாங்கள் செய்ய முடியாது என்று சொல்லவில்லை, நிதிநிலை சீரான பின்பு செய்யப்படும் என்றுதான் சொல்லி இருக்கின்றோம்.

எனவே செய்யவே முடியாது என்று சொன்னவர்கள் நிதிநிலை சரியான பின்பு செய்வோம் என்று சொல்லும் எங்களுக்கு எதிராக வேலை நிறுத்தத்தை அறிவிப்பது பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும், இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. தேர்தல் வருகின்ற நேரத்தில் இதைச் செய்தால் மக்களுக்கு அரசின் மீது கோபம் வரும் என்ற எண்ணத்தில் செய்கிறார்கள். ஆனால் பொதுமக்கள் இதையெல்லாம் அறிவார்கள். அவர்களுக்கு இடைஞ்சல் செய்கின்றவர்கள் மீது தான் பொதுமக்களுக்குக் கோபம் வரும்” என்றார்.

தொலைதூரம் செல்லும் பேருந்துகள் பணிமனைக்கு எடுத்து வரப்படுவதாக எழுந்த தகவல் குறித்த கேள்விக்கு, “அதிமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகத் தகவல் வந்துள்ளது. அவர்களே பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் வருவோம் என்பதும், அறிவிப்புக்கு முன்னதாக இத்தகைய செயல்களில் ஈடுபடுவதும் மக்களைப் பாதிக்கக்கூடியது. இதுகுறித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ஓட்டுநருக்கும், நடத்துநருக்கும் இடையில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “கடந்த அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்ட பே மேட்ரிக்ஸ் முறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வழங்கியுள்ளார். 5% சம்பள உயர்வை வழங்கி இருக்கிறார். தீபாவளிக்கு அவர்கள் கோரிக்கை வைப்பதற்கு முன்பாகவே 20% போனஸ் வழங்கி இருக்கிறார். இதனால் முதலமைச்சர் மீது போக்குவரத்து தொழிலாளர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயம் முதலமைச்சரின் எண்ணத்திற்கு மாறாகச் செயல்பட மாட்டார்கள்” என்றார்.

அகவிலைப்படி குறித்த கேள்விக்கு, “கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அகவிலைப்படி உயர்வை நிறுத்தி விட்டார்கள். இப்போது ஒரே நாளில் அதை வழங்க வேண்டும் என்பது சிரமமான விஷயம். அரசுக்கு இருக்கின்ற நிதி நிலைமை அனைவரும் அறிந்தது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஏற்றிவிட்டுப் போன கடன் சுமை, ஆட்சித் துவக்கத்தில் கரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி, அதற்குப் பிறகு மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரத்தில் ஏற்பட்ட பாதிப்பில் ஒன்றிய அரசு நிதி தராத நிலையிலும் முதலமைச்சர் நிதி அளித்து இருக்கிறார்கள்.

அதே போல் தென் மாவட்டங்களில் அதி கனமழையினால் ஏற்பட்ட இழப்பிற்கும் ஒன்றிய அரசு எந்த உதவியும் செய்யவில்லை. முதலமைச்சர் அவர்களுக்கான நிதியையும் வழங்கி இருக்கின்றார்கள். தேர்தல் நேரத்தில் அதிமுக இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. அதிமுகவின் நடவடிக்கைக்கு யாரும் துணைபோகாமல் இருக்க வேண்டும். அரசின் கஷ்டத்தையும், மக்கள் நலனையும் புரிந்துகொண்டு தொழிற்சங்கங்கள் இயங்க வேண்டும். தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல மக்களுக்குமான என்பதை உணர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: போக்குவரத்து தொழிற்சங்க ஸ்டிரை நடந்தாலும் பிரச்சனை இல்லை..! பொங்கலுக்கு என்ன ஏற்பாடுகள்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.