'மின்வாகனங்களுக்கு சார்ஜர் நிலையங்கள் அமைக்க 100 இடங்கள் தேர்வு' - அமைச்சர் செந்தில் பாலாஜி!

author img

By

Published : Aug 5, 2022, 4:11 PM IST

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டிலுள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜர் நிலையங்கள் அமைப்பதற்கு முதற்கட்டமாக 100 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மழையை எதிர்கொள்ள முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு எந்தவித சிரமமும் இன்றி மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

காவிரி ஆற்றில் வெள்ளம் செல்லும் இடங்களில் சில இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மரம் விழுந்த காரணத்தால் 150 மின்மாற்றிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இன்று (ஆக.05) மாலைக்குள் நீலகிரி மாவட்டத்தில் சீரான மின்சாரம் விநியோகிக்கப்படும்.

சீரான மின்சாரம் விநியோகிக்க 234 தொகுதிகளிலும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1.11 ஆயிரம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. 10 ஆயிரம் கி.மீ., மின் கம்பிகள் தயார் நிலையில் உள்ளன. கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் உள்ள மின்மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையங்கள் உள்ள இடங்களின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் புதைவட கம்பிகள் பதிக்கும் பணி முடிந்ததும் மீதமுள்ள மாவட்டங்களின் விவரங்கள் மற்றும் மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு விரைவில் அறிவிப்பு வெளியாகும். தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜர் நிலையங்கள் அமைப்பதற்கு முதற்கட்டமாக 100 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் கோரப்பட்டு அறிவிப்பு வெளியாகும்” என்றார்.

தொடர்ந்து அண்ணாமலை குறித்த கேள்விக்கு, “எந்தவித மக்கள் செல்வாக்கும் இல்லாமல் அரசியலில் தனது இருப்பை காட்டிக்கொள்ள ஊடகத்தைப் பயன்படுத்தி வரும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு பதிலளிக்க விரும்பவில்லை. ஏற்கெனவே நான் கேட்ட கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்த பிறகு, நான் அவருக்குப் பதில் சொல்கிறேன்.

அமலாக்கத்துறை என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது என்பதை ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவர் கூறி மிரட்டும் அளவிற்கு அண்ணாமலை உள்ளார்" என விமர்சித்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

இதையும் படிங்க: வரலாற்றில் இல்லாத வகையில் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன - சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.