ETV Bharat / state

''சாதிப் பிரச்னையால் மூடப்பட்ட கோயில்களை மீண்டும் திறக்க நடவடிக்கை'' - அமைச்சர் சேகர்பாபு உறுதி!

author img

By

Published : Jun 24, 2023, 4:07 PM IST

Etv Bharat
Etv Bharat

சாதி ரீதியாக ஏற்பட்ட பிரச்னையால் மூடப்பட்ட கோயில்களை மீண்டும் திறக்க இணை ஆணையர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தி, மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், ஒரு கால பூஜை திட்டத்திலுள்ள திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களின் வருகை மற்றும் ஆய்வு விவரங்களைப் பதிவேற்றம் செய்திடும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள “HRCE” எனும் கைபேசி செயலியினை இந்து சமய அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “இன்றைய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அனைத்தையும் முன்னெடுத்துச் செல்லும் துறையாக இந்து சமய அறநிலையத்துறை உள்ளது. இன்று HRCE செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே திருக்கோயில் என்ற செயலி அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது. திருக்கோயில் ஆவணங்களை ஸ்கேன் செய்து பத்திரப்படுத்தும் நிகழ்வும், ஓலைச்சுவடிகளை பத்திரப்படுத்தி ஆவணப்படுத்தும் நிகழ்வும் நடைபெறுகிறது.

இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இச்செயலி மூலம் ஒருகாலப் பூஜை திட்டத்தில் பணிகள் பூஜைகள் நடைபெறுகிறதா என்பதையும், திருப்பணிகளை அறிந்துகொள்ள முடியும். திருக்கோயில் பணிகளையும் கண்காணிக்க துரிதப்படுத்த செயலி உறுதுணையாக இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு சென்றுள்ளார்களா? என்பதை அலுவலகத்திலிருந்தே கண்காணிக்க முடியும்.

இச்செயலியினை பொறுத்தவரை துறை அலுவலர்களுக்கு முதலில் கொடுக்கப்படும். அர்ச்சகர்களுக்கும் இச்செயலி கொடுக்கப்படும். இதன்மூலம் பூஜை குறித்து அறிந்துகொள்ள முடியும். சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தை பொறுத்தவரை அர்ச்சகர்களை தெய்வத்திற்கு அடுத்தபடியாக பார்ப்போம். அர்ச்சகர்களுக்கு சமமாக உள்ள தீட்சிதர்கள் பக்தர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது. எது எல்லாம் சட்ட விரோதமோ அதை எல்லாம் ஒரு சில தீட்சிதர்கள் செய்கிறார்கள்.

நகை சரிபார்ப்புக்குச் செல்லும்போது நாங்கள் நீதிமன்றத்திற்குச் செல்வோம் என்று தீட்சிதர்கள் தெரிவித்தனர். நாங்களும் எதிர்பார்த்தோம். ஆனால், நீதிமன்றம் செல்வோம் என்று தற்போது வரை நிழல் பயம் காட்டி வருகின்றனர். சிதம்பரம் திருக்கோவிலைப் பொறுத்தவரை பக்தர்கள் நலனுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் இருந்து எந்நாளும் பின் வாங்கப் போவதில்லை” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ''வனத்துறை சட்டத்திற்கு உட்பட்டு, திருக்கோயிலில் ஒரு அங்கமாக யானை உள்ளது. சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கைகளை துறை எடுக்கும். திருக்கோயிலைப் பொறுத்தவரை யானைகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவம் பார்க்கப்பட்டு, சரியான உணவு, நீச்சல், நடைபயிற்சி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் கோயில் யானைகள் பாதுகாப்பாக பராமரிக்கப்படுகிறது. ஆகம விதி என்பதைத் தாண்டி பக்தர்கள் எண்ணங்களுக்குத் தான் முதலிடம். சட்டத்திற்கு உட்பட்டு தான் செயல்படுவோம். யானைகள் வாங்குவது கைவிடப்படாது.

“HRCE” கைபேசி செயலியினை திறந்து வைத்த அமைச்சர் சேகர்பாபு
“HRCE” கைபேசி செயலியினை திறந்து வைத்த அமைச்சர் சேகர்பாபு

இந்த ஆட்சி வந்த பிறகு மூடப்பட்ட 9 திருக்கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் 80 ஆண்டுகளுக்கு முன், மூடப்பட்ட தென் முடியனார் கோயில் திறந்து வைக்கப்பட்டது. 1996-97ஆம் ஆண்டிற்குப் பிறகு பழனி திருக்கோயிலில் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது. 25 ஆண்டுகள் வரை உயர்த்தப்படாமல் இருந்தது, அறங்காவலர் குழு கட்டண உயர்வு குறித்து முடிவெடுத்துள்ளார்கள். இது அதிகம், விரைவில் அறங்காவலர்கள் கூட்டத்தில் அதனை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கட்டணமில்லா திருமணம் நிறுத்தப்பட்டிருந்தது. திமுக அரசு அமைந்ததும் கட்டணமில்லா 500 திருமணங்கள் கடந்த ஆண்டு நடைபெற்றது. இவ்வாண்டு 2023-24ஆம் ஆண்டில் 600 திருமணங்கள் நடைபெறவுள்ளன. வரும் 7ஆம் தேதி மயிலாப்பூரில் 30 இணைகளுக்கு இலவச திருமணங்களை முதலமைச்சர் நடத்தி வைக்கிறார்.

அன்றைய தினமே துறையின் சார்பில் பல்வேறு மட்டங்களில் 150 திருமணங்கள் நடைபெறவுள்ளன. சாதி ரீதியாக மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தாமல் இருக்க மூடப்பட்டுள்ள கோயில்களை அனைவருக்கும் ஏற்ப கோயில்களை மாற்ற துறை உதவும்.

இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள திருக்கோயில்கள் சார்பாக நடத்தப்படும் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகள், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சி பள்ளிகள், வேத ஆகம பயிற்சி பள்ளிகள் மற்றும் பிரபந்த விண்ணப்பப் பயிற்சி பள்ளிகள் செயல்பாடுகள் குறித்தும் மாணவர்களின் சேர்க்கை குறித்தும் பயிற்சிப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் திறன் குறித்தும், சீராய்வு செய்து அறிவுரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாதி ரீதியாக ஏற்பட்ட பிரச்னையால் மூடப்பட்ட கோயில்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி மீதான ஊழல் குற்றச்சாட்டு உண்மைதான் - சிபிஎம் பாலகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.