ETV Bharat / state

புழல் பெண் கைதிகளால் நடத்தப்படும் முதல் பெட்ரோல் பங்க் - அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்!

author img

By

Published : Aug 13, 2023, 10:28 AM IST

புழல் பெண் கைதிகளால் நடத்தப்படும் முதல் பெட்ரோல் பங்க்
புழல் பெண் கைதிகளால் நடத்தப்படும் முதல் பெட்ரோல் பங்க்

இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் அம்பத்தூர் சாலையில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், அதை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.

புழல் பெண் கைதிகளால் நடத்தப்படும் முதல் பெட்ரோல் பங்க்

சென்னை: புழல் மத்திய சிறையில் உள்ள பெண் சிறைவாசகள் பணிபுரிய சென்னை அம்பத்தூர் சாலையில் 1.92 கோடி மதிப்பீட்டில் பெட்ரோல் பங்க் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், அதை நேற்று (ஆகஸ்ட் 12) சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி, டிஐஜிக்கள் கனகராஜ், முருகேசன், மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “சிறை, சீர்திருத்தத் துறை மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவை இணைந்து 5 இடங்களில் பெட்ரோல் பங்க்குகளை நடத்தி வருகிறது. ஆறாவது இடமாக புழல் மகளிர் சிறையில் உள்ள பெண் சிறைவாசிகள் முழுமையாக நடத்தக்கூடிய வகையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தமிழ்நாடு அரசின்படி அம்பத்தூர் சாலையில் பெட்ரோல் பங்க் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பெட்ரோல் பங்க் இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் சிறைவாசிகளால் நடத்தப்படுகிற ஒன்று. ஏற்கனவே தெலங்கானாவில் சிறையிலிருந்து விடுதலை பெற்றுச் சென்ற பெண் சிறைவாசிகளுக்கு என பெட்ரோல் பங்க் நடத்தப்படுகிறது. ஆனால், இந்தியாவிலேயே பெண் சிறைவாசிகளால் நடத்தப்படும் முதல் பெட்ரோல் பங்க் இதுதான் என்பது தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. ஆணுக்கு பெண் சமம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இது உள்ளது.

இங்கு பணிபுரிகின்ற பெண் சிறைவாசிகள், தற்போது தங்கள் குடும்பத்திற்கு மாதம் ரூ.6 ஆயிரம் அனுப்பக் கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். விரைவிலேயே அவர்கள் ரூ.10 ஆயிரம் வரை தங்கள் குடும்பத்திற்கு அனுப்பக்கூடிய வாய்ப்பு இங்கு உருவாக்கி தரப்பட இருக்கிறது.

எனவே, சிறையில் இருந்தாலும் கூட அவர்கள் தங்களின் தவறை உணர்ந்து, அதை திருத்தி வாழ்கின்ற ஒரு வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மேலும், அவர்களின் குடும்பத்திற்கு தேவையான செலவுகளுக்கு சிறையில் இருந்தே பணத்தை அனுப்பக்கூடிய வாய்ப்பையும் தமிழக அரசு அவர்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளது.

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைளில் உள்ள சிறைவாசிகளையும், ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபடுத்தி அதன் மூலம் அவர்கள் மாத மாதம் தங்கள் குடும்பங்களுக்கு குறிப்பிட்ட ஒரு தொகை அனுப்புவதற்கான வாய்ப்பை தமிழக அரசு உருவாக்கித் தந்து வருகிறது. சிறைவாசிகள் சிறையில் இருந்தாலும், அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்குமான தொடர்பு விட்டுப் போகாமல், குடும்ப உணர்வை, பாசத்தை வழக்குகின்ற உன்னத நோக்கத்தோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது” எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அபார வெற்றி பெற்ற இந்திய ஹாக்கி அணிக்கு 1.10 கோடி பரிசு - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.