ETV Bharat / state

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தாஜ்மஹாலை பின்னுக்குத் தள்ளிய மாமல்லபுரம்!

author img

By

Published : Apr 19, 2023, 10:27 PM IST

Etv Bharat
Etv Bharat

மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 984 வெளிநாட்டுப் பயணிகள் வருகை தந்து முதலிடத்தில் இருப்பதாக அமைச்சர் ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். குறிப்பாக, உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவின் தாஜ்மஹால், இதில் இரண்டாவது இடத்தில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 20, 21 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்த பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகியவற்றின் தொடர்ச்சியாக பல்வேறு துறைகள் ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக, இன்று (ஏப்.19) சுற்றுலா துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசினார். அப்போது பேசிய அவர், 'யுனெஸ்கோவால் அறிமுகப்படுத்தப்பட்ட பாரம்பரிய கலை நயமிக்க சுற்றுலா தலங்களின் பட்டியலில் மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 984 வெளிநாட்டுப் பயணிகள் வருகை புரிந்து முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் தாஜ்மஹால் 38 ஆயிரத்து 932 வெளிநாட்டுப் பயணிகள் பார்வையிட்டதாக உள்ளது' என்று கூறினார்.

2021-ல் தமிழ்நாட்டிற்கு 11 கோடியே 55 லட்சம் சுற்றுலாப்பயணிகள் வருகை புரிந்துள்ளதாகவும், அதில், 12 லட்சத்து 30 ஆயிரம் பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாடு வந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இதில் 2022-ல் 22 கோடியே 81 லட்சம் சுற்றுலாப்பயணிகள் வருகை புரிந்துள்ளனர்; அதில் 4 லட்சத்து 7 ஆயிரம் பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றார். 2021ஆம் ஆண்டை ஒப்பிட்டுப் பார்க்கும்போது 2022-ல் தான் 10 கோடி சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டுக்கு அதிகமாக வருகை தந்துள்ளதாகக் கூறினார்.

'' ’சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக எங்கே வேண்டுமானாலும் பேருந்தில் ஏறலாம்; எங்கே வேண்டுமானாலும் இறங்கலாம்’, என்ற திட்டம் குறித்தும், 5 பிரபலமான சுற்றுலா தலங்களில் லேசர் ஒளி விளக்குகளால் அலங்கரிக்க கூடிய திட்டங்கள் தொடர்பாகவும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படவுள்ளது'' என்று அவர் தெரிவித்தார். மேலும், சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் விரைவில், 'தமிழ்நாடு சுற்றுலா கொள்கை' அறிமுகப்படுத்தப்படும் என்றும் பதிலுரையில் அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஏற்காடு ஏரியில் 3D காட்சி...புதுப்பொலிவு பெறும் தனுஷ்கோடி... சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.