ETV Bharat / state

சிறையில் தயாரிக்கும் பொருட்கள் இனி ஆன்லைனில் கிடைக்க ஏற்பாடு - அமைச்சர் ரகுபதி

author img

By

Published : Jun 24, 2023, 6:46 AM IST

இனி சிறைக் கைதிகள் சிறையில் இருந்து கொண்டே தங்கள் குடும்பத்துக்கு வருவாய் ஈட்ட முடியும் - அமைச்சர் ரகுபதி
இனி சிறைக் கைதிகள் சிறையில் இருந்து கொண்டே தங்கள் குடும்பத்துக்கு வருவாய் ஈட்ட முடியும் - அமைச்சர் ரகுபதி

சிறைக் கைதிகள் சிறையில் இருந்து கொண்டே தங்கள் குடும்பத்துக்கு வருவாய் ஈட்ட முடியும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

இனி சிறைக் கைதிகள் சிறையில் இருந்து கொண்டே தங்கள் குடும்பத்துக்கு வருவாய் ஈட்ட முடியும் - அமைச்சர் ரகுபதி

சென்னை: எழும்பூரில் உள்ள சிறைத் துறை தலைமை அலுவலகத்தில் சிறைக் கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை சந்தைப்படுத்தும் விதமாக சிறைச் சந்தையை சட்டம் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் ரகுபதி நேற்று (ஜூன் 22) திறந்து வைத்தார்.

தொடர்ந்து, சிறைக் காவலர்களுக்கு உடற்பயிற்சி கூடம் மற்றும் சிறைத்துறை சார்ந்த தகவல்கள், சிறைக் கைதிகள் வரையும் வரைபடங்கள், கவிதைகள் உள்ளிட்டவை இடம் பெறும் சிறகிதழ் ஒன்றையும் தொடங்கி வைத்தார். மேலும், 14 லட்சம் ரூபாய் செலவில் இந்த சிறைச் சந்தையும், உடற்பயிற்சி கூடமும் நிறுவப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி மற்றும் சிறைத்துறை காவலர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, “இன்று சிறைகளில் ‘சந்தை’ என்ற புதிய திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய சிறைகளில் தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்களை சந்தைபடுத்தும் சிறைச்சந்தை தொடங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது.

சிறைக் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் பெறப்படும் வருவாயை அவர்கள் குடும்பத்திற்கு தரும் வகையில் இந்த புது முயற்சி நிறுவப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மத்திய சிறையில் தயாரிக்கப்படும் தரமான பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படும்.

குறிப்பாக, உலக பிரசித்தி பெற்ற மதுரை சுங்குடி சேலை மத்திய மதுரை சிறையில் தயாரிக்கப்படுகிறது. உணவுப் பொருட்கள் திருச்சி, சேலத்தில் தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது. இவை அனைத்தும் இங்கு விற்பனைக்கு வைக்கப்படும். சிறைச்சாலையில் தயாரிக்கப்படும் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், “ஆன்லைன் ரம்மி தொடர்பான அதிகார அமைப்பு குழு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அது விரைவில் அமைக்கப்படும். அண்ணா பிறந்த நாளுக்கு 700 சிறைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் 460 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

மற்ற சிறைக் கைதிகள் குறித்த ஆவணங்கள் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும், சில கோப்புகள் திருப்பி அனுப்பப்படுகின்றன. அவை மறு பரிசீலனைக்கும் அனுப்பப்படும். குறிப்பிட்ட சில வழக்குகளில் உள்ளவர்கள்தான் விடுவிக்கப்படவில்லை.

மற்றபடி, இஸ்லாமிய சிறைவாசிகளும் பொதுவான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு தான் வருகிறார்கள்” என்றார். மேலும், சிறைக் கைதிகள் சிறையில் இருந்து கொண்டே தங்கள் குடும்பத்துக்கு வருவாய் ஈட்டி தரும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Bus Driver Sharmila: கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா டிஸ்மிஸ்.. பஸ் உரிமையாளர் விளக்கம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.