ETV Bharat / state

"என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகள்" - நிதியமைச்சர் பொறுப்பு குறித்து பிடிஆர் உருக்கம்!

author img

By

Published : May 11, 2023, 2:08 PM IST

PTR
இரண்டு

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடமிருந்து நிதித்துறை பறிக்கப்பட்டு, தகவல் தொழில்நுட்பத்துறை வழங்கப்பட்டுள்ள நிலையில், தான் நிதித்துறை அமைச்சராக இருந்த இரண்டு ஆண்டுகள் தன் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகள் என பிடிஆர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழக அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, நிதியமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று(மே.11) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கடந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகளாகும். முதல்வர் மு.க. ஸ்டாலினின் தலைமையின் கீழ் பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு திருத்தப்பட்ட பட்ஜெட்டையும் (2021 - 22), பெருந்தொற்றுக்குப் பிறகு இரண்டு ஆண்டு பட்ஜெட்டுகளையும் (2022 - 23, 2023 - 24) சமர்ப்பித்துள்ளேன்.

முந்தைய ஆட்சியின் விளைவாக உட்சபட்ச பற்றாக்குறை மற்றும் கடன் விகிதங்களைப் பெற்றிருந்த போதிலும், நாங்கள் வரலாறு காணாத வகையில் சமூக நலத் திட்டங்களிலும், மூலதனச் செலவினங்களிலும் முதலீடு செய்துள்ளோம். இதனை என் பொது வாழ்விலும், என் வாழ்க்கையிலும் மிகச் சிறப்பான பகுதியாகக் கருதுகிறேன்.

நிதி ஆதாரங்களை வலுப்படுத்துதல் மற்றும் சமூக நல செலவினங்கள் ஆகியவை சமத்துவ சமுதாயத்திற்கு அவசியமான படிகள் என்றாலும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உந்து சக்தியாக விளங்குவது முதலீடுகள், நிறுவன விரிவாக்கம் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கம் ஆகியவைகளே ஆகும். உலகளவில் இன்று முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான நம்பர் 1 துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்ப இலக்காவை முதல்வர் எனக்குத் தற்போது வழங்கியதற்கு நான் நன்றியுள்ளவனாவேன். தொழில்நுட்பமே எதிர்காலத்தை வடிவமைக்கிறது என்பதை நாம் அறிவோம். கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு இத்துறையில் முன்னோடியாக இருந்தபோதிலும், கெடுவாய்ப்பாக கடந்த பத்தாண்டுகளில் இந்தத் துறையில் நமது உண்மையான செயல் திறனை எட்டுவதில் நாம் பின்தங்கிவிட்டோம்.

எனவே, எனக்கு முன்னாள் இத்துறையை நிர்வகித்த மனோ தங்கராஜின் பெருமுயற்சிகளின் தொடர்ச்சியாக இத்துறையில் கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தை விரைவுப்படுத்துவதற்கும், தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகத்தை மீண்டும் ஒரு முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தும் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முன்னோடியான உலகளாவிய திறன் மையத்தை நிறுவி நிர்வகித்ததன் மூலம் நான் பெற்ற சொந்த அனுபவமும், எனது தொழில் வாழ்வில் பெற்ற IT மற்றும் ITES தொழில்துறையுடனான தொடர்புகளும் இந்த அமைச்சகப் பொறுப்பில் நான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பயனளிக்கும் என நம்புகிறேன்.

இன்று பொறுப்பேற்கும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெற்றிகரமாகச் செயல்பட்டு மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். அவர் தனது பதவிக்காலத்தில் ஏற்கனவே நாம் எட்டியுள்ள முன்னேற்றங்களை மேலும் விரைவுபடுத்தி புதிய சாதனைகளைப் படைப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகள் நிதித்துறை பொறுப்பு வழங்கியதற்காகவும், தற்பொழுது எழுச்சி மிக்க புதிய பொறுப்பை வழங்கி மக்களுக்காகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக சில ஆடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அதில், முதலமைச்சர் ஸ்டானின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் இருவரும் ஒரே ஆண்டில் கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்டதாக பிடிஆர் பேசியது போல இருந்தது. இந்த ஆடியோக்கள் போலியானவை என பிடிஆர் விளக்கம் அளித்திருந்தார். இந்த ஆடியோக்கள் வைரலான நிலையில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என பரவலாக பேசப்பட்டது. இந்த சூழலில்தான் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடமிருந்து நிதித்துறை பறிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: TN Cabinet Reshuffle: பிடிஆர் உள்ளிட்ட 4 அமைச்சர்களுக்கு இலாக்கா மாற்றம்.. யார் யாருக்கு எந்த துறை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.