ETV Bharat / state

NDA எம்.பி.க்கள் கூட்டம்; ஓபிஎஸ் மகனுக்கு அழைப்பு!

author img

By

Published : Jul 19, 2023, 5:56 PM IST

NDA எம்.பிக்கள் கூட்டம்; ஓபிஎஸ் மகனுக்கு அழைப்பு !
NDA எம்.பிக்கள் கூட்டம்; ஓபிஎஸ் மகனுக்கு அழைப்பு !

தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க, தேனி எம்.பி., ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை நடைபெறவுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க, தேனி எம்.பி., ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு அழைப்பு விடுத்திருப்பது மீண்டும் அதிமுக வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகாரம் செய்யப்பட்டபோது, தேனி எம்.பி., ஓ.பி.ரவீந்திரநாத்தை சுயேச்சை எம்.பி.யாக கருத வேண்டும் என மக்களவை சபாநாயகருக்கு ஈபிஎஸ் தரப்பில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டது.

ஒருவழியாக அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரம் முடிவுக்கு வந்த நிலையில் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு அதிமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடிதம் அனுப்பியுள்ளார்.

நேற்று (ஜூலை18) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க ஓ.பி. ரவீந்திரநாத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அழைப்பு குறித்து செய்தியை ஓ.பி.ரவீந்திரநாத் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், “நாளை (ஜூலை20) புதுடெல்லியில் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று (ஜூலை19) மாலை 05:30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற இருக்கும் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும்.

இதையும் படிங்க: தேசிய ஜனநாயக கூட்டணி 330 தொகுதிகளில் வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி உறுதி!

இதில் முக்கிய அம்சங்கள் மற்றும் மசோதாக்கள் குறித்து விவாதிப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) சார்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணி அழைப்பு விடுத்ததின் பேரில் அ.இ.அ.தி.மு.க சார்பில் மக்களவை தலைவராக நான் கலந்து கொண்டு சிறப்பித்து ஆலோசனை வழங்க உள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை சுயேச்சை எம்.பியாகவே கருதி அழைப்பு விடுத்திருக்கின்றனர். இதனால், அதிமுகவில் எந்த ஒரு தாக்கமும் ஏற்படாது” எனக் கூறினார்.

மேலும், 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என்று உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக இந்த தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று ரவீந்திரநாத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். எனவே, 30 நாட்களுக்கு இந்த தீர்ப்பு அமலுக்கு வராது என்பதால் மேல்முறையீட்டுக்காக தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: MK Stalin letter to PM Modi:பருத்தி மீதான 11% இறக்குமதி வரியைத் திரும்பப் பெறுக - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.