ETV Bharat / state

கல்லூரிகளில் 'கருணாநிதி நூற்றாண்டு' விழா: அதிகாரிகளுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை!

author img

By

Published : May 31, 2023, 1:49 PM IST

Minister Ponmudi consults with Vice Chancellors about former chief minister Karunanidhi Centenary celebrations in universities
துணை வேந்தர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் கொண்டாடுவது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள் உடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார். துணை வேந்தர்கள் மற்றும் அதிகாரிகளின் கருத்துக்கள் அடிப்படையில் முடிவெடுக்கப்பட உள்ளது.

சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சிறப்பாக கொண்டாடுவது குறித்து துணைவேந்தர்கள், கல்லூரி கல்வி இயக்குனர், தொழில்நுட்ப கல்வி இயக்குனர் ஆகியோருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், தொழில்நுட்ப கல்வி இயக்குனர், கல்லூரி கல்வி இயக்குனர் ஆகியோருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன்,
தமிழ்நாடு உயர் கல்வி மன்றத்தின் துணைத் தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆலோசனையில் தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், திருவள்ளூர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 19 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும், தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்தும், மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டிய மற்றும் நீக்க வேண்டிய பகுதிகளை குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.

மேலும் கல்லூரிகளில் கட்டணங்கள் மாறுபாட்டுடன் வசூலிக்கப்படுகின்றன அவற்றை ஒரே மாதிரியாக வசூலிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மாணவர்களுக்கு வேலை வாய்ப்பிற்கான வழிகாட்டியாகவும், தொழிற் கல்வி குறித்தும் வழிகாட்டும் நோக்கத்துடன் முதன் முறையாக மாணவர்களுக்காக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள நான் முதல்வன் திட்டத்தை பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் எந்தளவு செயல்படுத்தப்பட்டு உள்ளன என்பது குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் எந்த மாதிரி நிகழ்ச்சி நடத்தலாம் என்பது குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீவிரமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எந்தெந்த நிகழ்ச்சியை நடத்துவது என்பது குறித்து துணைவேந்தர்களின் கருத்துக்களை கேட்ட பின்னர் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளது.

தனியார் கல்லூரியில் சேரும் மாணவர்களிடம் மூன்றாண்டிற்கு சேர்த்து ஒரே நேரத்தில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் கல்லூரிகள் அரசு நிர்ணயம் செய்யும் கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில் கட்டணத்தை ஒரே சீராக வசூலிக்க வேண்டும் என துணை வேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கை.. துணை வேந்தர்களுடன் ஜூன் 5ம் தேதி ஆளுநர் ஆலோசனை.. அமைச்சர் பொன்முடி ரியாக்ஷன் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.