ETV Bharat / state

சென்னையில் ரூ.5000 கோடியில் 8 வழி ஈரடுக்கு மேம்பாலம் கட்ட திட்டம்: நிதின் கட்கரி

author img

By

Published : Oct 28, 2020, 9:08 PM IST

சென்னை: சென்னையில் 5000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 வழி ஈரடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிட்டுள்ளதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பின்பு இதற்கான பணிகள் நடைபெறும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

nitin gatkari
nitin gatkari

சென்னை வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முதலமைச்சர் பழனிசாமியைச் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னை மதுரவாயலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் சாலையை விரிவுப்படுத்த, 700 கோடி ரூபாய் மதிப்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான நிலத்தை கையகப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அதேபோன்று சென்னை துறைமுகத்திலிருந்து புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் நான்கு வழி பறக்கும் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாநில அரசு இதற்கு மூன்று நுழைவு வாயில்கள் அமைக்க வேண்டும் எனக் கோரி வருகிறது. இத்திட்டத்தின் செலவு மூன்றாயிரத்து 100 கோடி ரூபாயாக உள்ளது. நாங்கள் நான்கு வழிக்கு பதிலாக ஆறு வழி அல்லது எட்டு வழி கொண்ட இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைக்க பன்னாட்டு நிபுணர்களிடம் ஆலோசனை பெறலாம் என்றும் தெரிவித்துள்ளோம்.

இந்தத் திட்டத்தின் செலவு 5 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மூலமாக சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு போக்குவரத்து நெரிசல் பிரச்னை தீர்க்கப்படும். இந்த மேம்பாலத்தை உலகத்தரத்தில் கட்ட முடிவு செய்துள்ளோம். இந்தத் திட்டத்திற்கு நில கையகப்படுத்தும் செலவில் 50 விழுக்காடு சென்னை துறைமுகமும், 50 விழுக்காடு மாநில அரசும் தர முடிவு செய்துள்ளது.

நிதின் கட்கரியை பார்க்க வந்த முதலமைச்சர்
நிதின் கட்கரியை பார்க்க வந்த முதலமைச்சர்

கூடுதல் செலவை ஈடுகட்டுவதற்காக இந்த மேம்பாலம் கட்டும் பணிகளுக்குத் தேவையான எஃகு, சிமெண்ட், மணல் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி ரத்து செய்யப்படும். இதன் மூலமாக மத்திய அரசுக்கு 500 கோடி ரூபாய் வரை வரி இழப்பு ஏற்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.