பூஸ்டர் டோஸ் அனுமதி கிடைத்ததும் செயல்படுத்துவோம்- அமைச்சர் உறுதி

author img

By

Published : Sep 6, 2021, 1:12 PM IST

minister-ma-subramaniyan-talks-about-booster-dose-vaccine-in-assembly

இரண்டு தவணை செலுத்தியவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் செலுத்த உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கினால் அதை செயல்படுத்தும் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், பூஸ்டர் டோஸ் செலுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.

தீர்மானத்தின் மீது பேசிய விஜயபாஸ்கர், கரோனாவுக்கான இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மூன்றாவது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு பூர்வாங்க பணியை அமெரிக்கா தொடங்கியிருப்பதாக பேசினார்.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தாலும், அதன் நோய் எதிர்ப்புத் திறன் ஒரு வருடம் மட்டுமே இருக்கும் என்பதால், தமிழ்நாட்டில் பூஸ்டர் டோஸ் செலுத்துவதில் அரசின் நிலைப்பாடு என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், பூஸ்டர் டோஸ் செயல்படுத்த ஒன்றிய அரசு சார்பில் வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், அந்த குழு இதுவரை அது தொடர்பான செயல்முறைகளை வழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பூஸ்டர் டோஸ் செலுத்துவது தொடர்பான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலக சுகாதார நிறுவனம் அனுமதியளித்தால், அதனை முதல் செயல்படுத்தும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: நிபா வைரஸ் - அறிகுறிகள் என்னென்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.