ETV Bharat / state

‘பிரதமரின் எண்ணம் தமிழ்நாட்டில் நிறைவேறும்’ - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

author img

By

Published : Apr 5, 2022, 6:41 AM IST

Updated : Apr 5, 2022, 6:56 AM IST

‘பிரதமரின்
‘பிரதமரின்

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற பிரதமரின் எண்ணம், முதன் முதலில் தமிழ்நாட்டில் முழு நிறைவு பெறும் என சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற உடலுறுப்பு தானம் விழிப்புணர்வு பயிற்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் பேசும்போது, “உறுப்பு செயலிழப்பு குறிப்பாக சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் செயலிழப்பு என்பது அதிகரித்துக் கொண்டு வருகிறது. கரோனா பேரிடருக்கு பிறகு இதுபோன்ற பாதிப்புகள் தமிழகத்தில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும், உலகெங்கிலும் அதிகரித்து இருக்கிறது.

இந்நிலையில் மூளைச்சாவு ஏற்பட்ட நபர்களிடமிருந்து உறுப்புகளை தானமாக பெற்று செயலிழந்து அவதிப்படும் நபர்களுக்கு அதை பொறுத்தி மறுவாழ்வு அளிக்கிற அந்த உன்னதமான சிகிச்சை முறையை வேகப்படுத்துவது, கூடுதலாக்குவது என்ற நிலையில் கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியில், 130க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பல்வேறு துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் பங்கேற்று இருக்கின்றனர். மேலும், ஆன்லைன் மூலம் 160-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் பங்கேற்று இருக்கின்றனர்.

உடல் உறுப்பு தான விழிப்புணர்வு

தமிழ்நாட்டில் குறிப்பாக 2008ஆம் ஆண்டு சித்தேந்திரா என்ற 15 வயது மாணவன் விபத்து ஒன்றில் உயிரிழந்தபோது அவருடைய உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, பல உயிர்கள் அன்றைக்கு காப்பாற்றப்பட்டது. அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கருணாநிதி, உடனடியாக ஒரு ஆணையத்தை உருவாக்கி அன்றிலிருந்து உறுப்பு தானத்தை கூடுதல் ஆக்குவதற்கான ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்கான அந்த சிகிச்சை முறையை வேகப்படுத்துவதற்குமான பல நடவடிக்கைகளை எடுத்தனர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் உறுப்பு தானத்தை செய்ய முன்வந்தனர். உடலுறுப்பு தானம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒட்டுமொத்த இந்தியாவிலும் சற்று தொய்வு ஏற்பட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவையிலேயே ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.

பிரதமரின் எண்ணம்

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்கின்ற வகையிலான அந்த தீர்மானத்தில் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தொடங்குவதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களையும் இணைத்து 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத நிலை இருக்கிறது. பெரம்பலூர், தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் வேண்டுமென்ற கோரிக்கை, ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து விடுத்தோம்.

அவரும் ஏற்கெனவே இந்த அரசாங்கத்தின் கொள்கையும் கூட அதுவாகத்தான் இருக்கிறது. பிரதமர் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்கின்ற அந்த திட்டத்தை மனதில் வைத்திருக்கிறார் என்கிற செய்தியை பெருமையோடு எடுத்துச் சொன்னார். தமிழகத்தில் ஏற்கெனவே 36 மருத்துவக் கல்லூரிகள் இருக்கிறது. 6 மாவட்டங்களில் மட்டுமே மருத்துவக் கல்லூரிகள் தேவைப்படுகிறது.

இந்த 6 மாவட்டங்களிலும் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் வந்துவிட்டால், உங்களுடைய அந்த எண்ணம், பிரதமருடைய எண்ணம் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற எண்ணம், முதன் முதலில் தமிழ்நாட்டில் முழு நிறைவு பெறும் என்கின்ற விடயத்தைச் சொன்னவுடன் ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் உடனடியாக, தான் இதற்கான நடவடிக்கைகளை கவனிக்கிறேன், பரிசீலிக்கிறேன் என மகிழ்ச்சியோடு எடுத்துச் சொல்லியிருக்கிறார்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வெள்ளை மாளிகை செல்கிறார் பராக் ஒபாமா!

Last Updated :Apr 5, 2022, 6:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.