ETV Bharat / state

'மாமன்னன் பட சர்ச்சைக்குள் சிக்க விரும்பவில்லை' - அமைச்சர் மா. சுப்பிரமணியன்!

author img

By

Published : Jul 2, 2023, 8:14 PM IST

அமைச்சர் மா சுப்பிரமணியன்
Etv Bharat அமைச்சர் மா சுப்பிரமணியன்

மாமன்னன் பட சர்ச்சைக்குள் நான் சிக்க விரும்பவில்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில் பணியாற்றும் 60ஆயிரத்து 587 தூய்மைப் பணியாளர்களுக்கான அனைத்து பரிசோதனைகளும் உள்ளடக்கிய முழு உடல் பரிசோதனை திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, “மேயர் என்று அழைத்தவுடன் நான் மேடைக்கு வந்து பேச தொடங்குவதற்கு வந்து விட்டேன். 2006 முதல் 2011 வரை சென்னை மாநகராட்சியில் மேயராக இருந்தபோது நிகழ்ச்சிகளில் உங்களோடு தினந்தோறும் கலந்து கொண்ட அந்த பழைய நினைவு இன்னமும் உள்ளது.

2006-ல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான், துப்புரவுத் தொழிலாளர்கள் என்கின்ற அந்த பெயரை மாற்றி தூய்மைப் பணியாளர்கள் எனவும், மயானங்களில் பணியாற்றுகிற தொழிலாளர்களுக்கு வெட்டியான் என்ற பெயர் மாற்றப்பட்டு மயான உதவியாளர்கள் எனப் பெயர் மாற்றம் செய்தவர்.

மயான உதவியாளர்கள் மாநகராட்சியில் நிரந்தரப் பணியாளர்கள் அல்ல. அவர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் ஒரு அடையாள அட்டை மட்டுமே தரப்பட்டிருக்கும். மயானத்திற்கு வரும் பொதுமக்களிடம் ஏதாவது ஒரு தொகை பெற்றுக் கொண்டு அவர்கள் உடலை தகனம் செய்வதோ, எரிப்பதோ செய்வார்கள். அவர்களுக்கு மாநகராட்சி செய்யும் உதவி அடையாள அட்டை தருவது மட்டுமே. ஒரு ரூபாய் கூட மாநகராட்சி அவர்களுக்கு சம்பளம் தருவதில்லை.

இதைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சியில் இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே முதல் முறையாக சென்னை மாநகராட்சியில் அனைத்து மயானங்களிலும் அடக்கம் செய்வது இலவசம் என்று அறிவித்தோம். அடக்கம் செய்வதற்கு அறிவிக்கப்பட்டது மட்டுமல்ல. இதுவரை அடையாள அட்டை மட்டுமே பெற்றுக் கொண்டு வந்த மயான உதவியாளர்களுக்கும் அரசு ஊழியராக 183 மயான உதவியாளர்களுக்கும் பணி ஆணையும் வழங்கப்பட்டது.

பணி ஆணைகளுடன் அவர்களுடைய வாரிசுகளையும் படிக்க வைக்கும் முழுப் பொறுப்பையும் அரசே ஏற்று அறிவித்தது. அரசின் சார்பாக திட்டங்கள் பல கொண்டு வந்தாலும் ஒரு சிலர் அதை சீர் குலைக்கும் பணியில் ஈடு படுகின்றனர். இந்த அரசை பொறுத்தவரை வீதி மீறல் இருக்காது. கடந்த நாட்களில் 103 முகாம்களில் 1 லட்சம் பெரும் மேல் பயன் அடைந்துள்ளனர். மலை கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களில் இதயம் காப்போம் என்கின்ற திட்டம் 3 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மலைக்கிராமங்களில் குக்கிராமங்களில் வாழ்கின்ற மக்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டால் ஒரு குறுகிய காலத்தில் அவர்களுடைய உயிரை காப்பாற்றும் விதமாக தற்காலிகமான கூட்டு மருந்து திட்டம், கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் கோவை மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த திட்டத்தின் அடிப்படையில் 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் துணை சுகாதார நிலையங்கள் 8ஆயிரத்து 713-ல் மாரடைப்புக்கான கூட்டு மருந்துகள் இருப்பு வைத்திருக்கப்படும்.

தமிழ்நாட்டில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ள குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் கர்ப்ப காலம் முதல் 1000 நாட்கள் குழந்தையையும் குழந்தையும் தாயையும் பராமரிப்பதற்காக 38 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கர்ப்ப காலத்தில் தாய்மார்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும், குழந்தை பிறப்பிற்கு பிறகு 2ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 5ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது” என பேசினார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி மக்கள் நல்வாழ்வு துறையில் 110 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 104 ஆவது அறிவிப்பு என்பது தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் பணிபுரியும் 60 ஆயிரத்து 587 தூய்மைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றி கொண்டிருக்கிற 19ஆயிரத்து 88 பேர், சென்னை நீங்களாக தமிழ்நாட்டில் உள்ள 20 மாநகராட்சிகளில் பணியாற்றக்கூடிய 21ஆயிரத்து 693 பேர், தமிழ்நாட்டில் உள்ள 138 நகராட்சிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் 14ஆயிரத்து 430 தூய்மைப் பணியாளர்கள், தமிழ்நாட்டில் உள்ள 490 பேரூராட்சிகளில் பணியாற்றும் 5ஆயிரத்து376 தூய்மைப் பணியாளர்கள் என மொத்தமாக 60 ஆயிரத்து 587 பேருக்கு உடல் பரிசோதனை செய்யும் திட்டம் இன்று முறையாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஓராண்டு காலம் முழு உடற் பரிசோதனை செய்ததற்கு பிறகு, இவர்களுக்கான டேட்டா என்ட்ரி தயாரிக்கப்பட உள்ளது. 60 ஆயிரத்து 587 பேரின் சுகாதாரத்திற்கும் உடல் நிலைக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொறுப்பு என்கின்ற வகையில் இன்று இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஓராண்டு முடிவதற்குள் இவர்களுக்குத் தேவையான அனைத்து வகையான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு இவர்களுக்கும் இருக்கிற நோய் பாதிப்புகளை கண்டறிந்து அவற்றுக்கான சிகிச்சைகளை சம்பந்தப்பட்ட துறைகளின் சார்பில் மக்கள் நல வாழ்வு துறை முன்னெடுத்து அதற்கான முழுமையாக முயற்சி செய்து தரப்படும்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தவறாக ட்ரிப்ஸ் போட்டதால் குழந்தையின் கை அழுகியது தொடர்பாக 3 மருத்துவர்கள் கொண்ட குழு இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதன் பின்னர் இதற்கான அறிக்கை ஓரிரு நாட்களில் தரப்பட்டு பின்னர் இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். கடலூர் அரசு மருத்துவமனையில் தகவறாக ஊசிப் போட்ட செவிலியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் தேசிய அளவில் 15 விழுக்காடு இடங்களுக்கும், மாநில அளவில் மீதமுள்ள இடங்களுக்கும் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படும்” என்றார்.

தொடர்ந்து, மாமன்னன் திரைப்படம் குறித்த அதிமுகவினரின் கருத்துக்கு பதிலளித்த அவர், “திரைக்கதையை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ், மாமன்னன் என்னுடைய தந்தையின் கேரக்டர் என கூறியிருக்கிறார். அப்போது அதிமுகவின் மாவட்டச் செயலாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். எனவே இந்த சர்ச்சைக்குள் சிக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மேகதாதுவில் அணை கட்டும் முயற்சி... திமுக எதிர்ப்புத் தெரிவிக்காதது ஏன் - ஈபிஎஸ் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.