ETV Bharat / state

'புன்னகை திட்டம்’ மூலம் 4 லட்சம் மாணவர்களுக்கு பல் பரிசோதனை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

author img

By

Published : Mar 9, 2023, 4:21 PM IST

'புன்னகை திட்டம்’ மூலம் 4 லட்சம் மாணவர்களுக்கு பல் பரிசோதனை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
'புன்னகை திட்டம்’ மூலம் 4 லட்சம் மாணவர்களுக்கு பல் பரிசோதனை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

புன்னகைத் திட்டத்தின் கீழ் 4 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல் பரிசோதனை செய்யப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

சென்னை: நந்தனத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து செயல்படுத்தும் பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அப்போது பல் பராமரிப்பு குறித்து விளக்கும் குறுந்தகடு மற்றும் விளக்கக் குறிப்பு ஆகியவை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து புன்னகை பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டு, அதன் லோகோவை அமைச்சர்கள் இருவரும் வெளியிட்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பல் பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதன் முதற்கட்டமாக சென்னையில் 54,000 குழந்தைகளுக்கு பல் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இந்த திட்டம் அவர்களுக்கு ஏற்படும் பல் சொத்தை, ஈறு பிரச்னைகளை கண்டறிந்து சரி செய்ய உதவும். சென்னையில் மட்டுமல்ல, அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு இந்த திட்டம் சென்றடைய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

‘புன்னகை’ என்ற திட்டத்தின் கீழ் சோதனை அடிப்படையில் சென்னையில் உள்ள 54,000 மாணவர்கள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

தேசிய நல வாழ்வு இயக்கத்தின் பங்களிப்போடு தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு, 4 லட்சம் மாணவர்கள் பயன் அடைவார்கள். சென்னை மாநகராட்சி மேயராக நான் இருந்த போது, சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பல் பரிசோதனை செய்ப்பட்டது. இந்தியாவில் இருக்கும் 5 முதல் 15 வயது வரை உள்ள 60 சதவீத குழந்தைகளுக்கு பல் பிரச்சினை பாதிப்பு உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள் கொசுக்களை கட்டுப்படுத்த தீவிரப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரிய கால்வாய்களில், படகுகள் மூலம் மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. கொசுக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும். எச்3 என்2 வைரஸ் காய்ச்சல் வந்தால், மூன்று, நான்கு நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கரோனா வைரஸ் தொற்றுக்கு பயன்படுத்தியது போல் முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும். இந்த காய்ச்சல் வந்து யாரும் மருத்துவமனையில் தீவிரமாக சேர்ந்து சிகிச்சை பெறும் நிலையில் இல்லை. இது தீவிரமானது இல்லை. இருப்பினும், மருத்துவமனையில் அனைத்தும் தயாராக உள்ளது.

தமிழ்நாட்டில் மருந்து, மாத்திரைகள் பற்றாக்குறை இல்லை. காய்ச்சலைக் கண்டறிவதற்காக நாளை(மார்ச்.10) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தமிழ்நாடு முழுவதும் சென்னையில் 200 இடங்கள் உட்பட மொத்தம் 1,000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது" என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "பள்ளிக் கல்வித்துறையின் மாணவர்கள் மீது மருத்துவத்துறை மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கரோனா தடுப்பூசி வழங்குவதிலும் மாணவர்கள் மீது அக்கறையுடன் செயல்பட்டனர். நாம் பள்ளி விடுமுறை காலங்களில் இங்க் அடித்து விளையாடுவோம்.

இந்த மாணவர்கள் மேசையை அடித்து உடைத்து விளையாடுகின்றனர். தருமபுரியில் பள்ளி மாணவ, மாணவிகள் பெஞ்சுகளை அடித்து உடைத்தது தொடர்பாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், பள்ளிக்கு கடிதம் எழுதச் சொல்லி அறிவுறுத்தி இருக்கிறோம். மேலும் மாணவர்களின் பெற்றோர்களை வரச் சொல்லி எச்சரிக்கை கொடுக்க உள்ளோம்.

பொது சொத்துக்களை சேதப்படுத்தக் கூடாது என்பது குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தருமபுரியில் அரசுப்பள்ளி வகுப்பறையை சூறையாடிய மாணவ, மாணவிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.