ETV Bharat / state

காவிரி வரலாறு தெரியாமல் பேசும் ஒன்றிய அமைச்சர் - துரைமுருகன் காட்டம்!

author img

By

Published : Aug 7, 2023, 10:16 AM IST

minister durai murugan
அமைச்சர் துரைமுருகன்

காவிரியின் வரலாறு தெரியாமல் ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பேசி வருவதாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்டமாக விமர்சித்துள்ளார்.

சென்னை: காவிரியின் வரலாறு தெரியாமல் ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பேசி வருவதாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்டமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “கடந்த இரண்டு மாதமாக கர்நாடக அரசு, தமிழ்நாட்டிற்கு உச்சநீதிமன்றம் அறிவித்த அளவுப்படி தண்ணீர் வழங்கவில்லை இது குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கும், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதி இருக்கிறார். மேலும், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நான் இரு முறை நேரில் சந்தித்து நிலைமைகளை எடுத்துக்கூறினேன் என்றார்.

மேலும், காவிரியிலிருந்து தண்ணீரை திறந்துவிடு என்று கூறுகிற அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மட்டுமே உண்டு ஆனால், அந்த வாரியம் கூட்டிய அனைத்து கூட்டங்களிலும், கலந்து கொண்ட தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடகத்தை அறிவுறுத்துமாறு பலமுறை கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் இதுவரை முழுமையாக செயல்படவில்லை. நீர் சராசரியாக கிடைக்கும் வருடங்களில் கர்நாடக மாநிலம், எந்தெந்த மாதங்களில் எவ்வளவு நீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஆனால், நீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் நீரை பகிர்ந்து கொள்வதை Pro Rata Basis என்று குறிப்பிடுவர். அந்த பங்கீட்டை காவிரி மேலாண்மை வாரியம் ஒழுங்காக செய்யவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், வாரியமானது மத்திய அரசின் கீழ் இயங்குவதால் தான் தமிழ்நாட்டிற்கு நீர் திறந்து விட கர்நாடகத்தை அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றோம். அந்த பணியை வாரியம் செய்ய வேண்டும் என்று தான் தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்த கடிதத்திற்கு, பிரதமர் அலுவலகமோ அல்லது ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரோ பதில் அளிக்காத நிலையில், ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் "கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி, தமிழ்நாட்டில் திமுக ஆட்சி, இரண்டும் ஓர் அணியில் இருக்கிறார்கள் எனவும், ஏன் பிரச்னையை நேரில் பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடாது?” எனத் தெரிவித்திருக்கிறார்.

அந்த வகையில், ஒன்றிய இணை அமைச்சருக்கு காவிரி பிரச்னையின் முழு விவரம் தெரியவில்லை என்றே கூறலாம். 1967 முதல் 1990 வரை இப் பிரச்னை குறித்து பேசி பேசி எந்த முடிவிற்கும் வர முடியாத நிலையில் தான் ஒன்றிய அரசு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கி, அந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் சேர்ந்த பின், உச்ச நீதிமன்றம் சில திருத்தங்களோடு மேலும் தீர்ப்பு வழங்கிய பிறகு இரு மாநிலங்களிடையே பேச்சு வார்த்தை என்பதற்கு இடமில்லை. மேலும், பேச்சு வார்த்தையின் மூலம் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்றால் நடுவர் மன்றம் அமைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்றார்.

இவையெல்லாம் நீண்ட காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வரலாறு 'தாயும், பிள்ளையும் ஒன்று என்றாலும் வாயும், வயிறும் வேறு’ என்று கிராமங்களில் கூறுவது போல, தோழமையாக இருந்தாலும், தோழமையாக இல்லாவிட்டாலும் அவரவர் உரிமையை நிலைநாட்டுவதில் அவரவர்கள் உறுதியாக இருப்பார்கள். எனவே, அந்த நிலைப்பாடு தான் தமிழ்நாட்டின் நிலைப்பாடு என்றார். இந்த விவரம் எல்லாம் தெரியாமல் இணை அமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அறிவுரை சொல்வது போல், அறிக்கை வெளியிட்டது வேடிக்கையாக இருக்கிறது என்றார்.

மேலும், இது வேடிக்கையானது மட்டுமல்ல இதில், வேதனை என்னவென்றால், தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சராகவும், முன்னாள் முதலமைச்சராகவும், இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம் அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக மாநில முதலமைச்சரோடும், நீர்வளத்துறை அமைச்சரோடும் பேசி நீர் பெற வேண்டும் என்று தெரிவித்தது தான். இனி பேச்சு வார்த்தைக்கு இடமில்லை என்ற நிலையில் தான் நடுவர் மன்றம் போனோம், தீர்ப்பு பெற்றிருக்கிறோம். இந்த தீர்ப்பில் ஏதாவது பிரச்னை என்றால் உச்ச நீதிமன்றத்தைத் தான் நாடே வேண்டுமே தவிர, மீண்டும் கர்நாடக மாநிலத்தோடு பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று கூறுவது காவிரி பிரச்னையின் அடிப்படை வரலாறே தெரியாதது தான். பாவம், அரசியல் பிரச்னையில் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் குழம்பி இருக்கிறார் என்பதைத் தான் அவர் அறிக்கை காட்டுகிறது” என அறிக்கையில் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க:‘ராகுல்காந்தி நாடாளுமன்றம் வருவதற்கு சபாநாயகர் விரைந்து நடவடிக்கை எடுப்பார்’ - டி.ஆர்.பாலு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.