நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு முதுநிலை கோயில்களில் கலை நிகழ்ச்சிகள் - அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

author img

By

Published : Sep 20, 2022, 7:57 PM IST

நவராத்திரி திருவிழா முன்னிட்டு முதுநிலை கோவில்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படம்- அமைச்சர் பி.கே.சேகர்பாபு

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, முதுநிலை திருக்கோயில்களில் ஆன்மிக சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்குகள் நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவதோடு, சட்டப்பேரவை மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

2022 – 2023ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின்போது, 'திருக்கோயில்களில் திருவிழா மற்றும் முக்கிய நாட்களில் நடைபெற்று வந்த ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மீண்டும் முதற்கட்டமாக 48 முதுநிலை திருக்கோயில்களில் சிறப்பாக நடத்தப்படும்' என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு இறையன்பர்கள் பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக முக்கிய திருக்கோவில்களில் அந்தந்த மாவட்ட கலை பண்பாட்டுத்துறையினருடன் இணைந்து ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளை நடத்திட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோவிலில் திருமதி. தேச மங்கையர்கரசி அவர்களின் ஆன்மிகச்சொற்பொழிவு, கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவிலில் புலவர் ராஜாராம் அவர்களின் தலைமையில் பட்டிமன்றம், மதுரை, அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயிலில் திருமதி. சுசித்ரா குழுவினரின் பக்தி பாட்டு, திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் திருமதி. மஹதி குழுவினரின் பக்தி இன்னிசை, திருவானைக்காவல், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோவியில் SK நாட்டிய கலா நிகேதன் அகாடமி நடத்தும் பரதநாட்டியம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

மேலும், இராமேஸ்வரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில், திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில், திருவொற்றியூர், அருள்மிகு வடிவுடையம்மன் திருக்கோவில், மேல்மலையனூர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், சென்னை, சூளை, அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் உள்ளிட்ட முக்கிய திருக்கோயில்களிலும் நவராத்திரி திருவிழாவின்போது ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இன்னிசை, வில்லுப்பாட்டு, கிராமிய கலை நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

நவராத்திரி திருவிழாவின்போது முக்கிய திருக்கோவில்களில் நடத்தப்படும் ஆன்மிக நிகழ்ச்சிகளில் இறையன்பர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பு சேர்க்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:ஏம்மா நீ எஸ்சி தானே? விவாதத்திற்குள்ளாகும் உயர்கல்வித்துறை அமைச்சரின் பேச்சு..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.