சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 10 வரையிலான வகுப்புகளில் பயில்கின்ற, அனைத்து மாணவர்களும் படிப்படியான முறையில், தமிழை ஒரு பாடமாக கற்பதனை உறுதி செய்வதற்காக அரசால் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் கற்பதற்கான சட்டம் இயற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ் கற்பதற்கான விதிகள், கடந்த 2012 ஆம் ஆண்டு வகுக்கப்பட்டது. அதன்படி, மாநிலப் பாடத்திட்டங்களைப் பின்பற்றும் பள்ளிகளில் 1 முதல் 10 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தமிழை ஒரு பாடமாக கற்கின்றனர்.
இந்த நிலையில், மாநில பாடத்திட்டம் அல்லாத பிற வாரியங்களால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளான CBSE, ICSE, IGCSE, IB போன்றவற்றிலும் தமிழ்மொழிப் பாடம், 2015 - 16 ஆம் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பிலும், 1 மற்றும் 2 வகுப்புகளுக்கு 2016 - 17ஆம் கல்வியாண்டில் தொடங்கி படிப்படியான முறையில் 2024 - 2025 இல் 10 ஆம் வகுப்பு வரையில் கற்பிக்கப்படுதற்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
பிறவாரியப் பள்ளிகளில், தமிழைப் பாடமாக கற்கும் மாணவர்களும் அயல் மாநிலங்களிலிருந்து வேலை நிமித்தமாகவோ அல்லது பணி மாறுதலிலோ தமிழகத்திற்கு வந்து பள்ளிகளில் சேரும் தமிழைக் கற்காத மாணவர்களும் உள்ளனர். இந்த மாணவர்களைக் கருத்தில் கொண்டு தேர்வினை எழுதுவதற்கு வழிமுறைகளும் அளிக்கப்பட்டுள்ளன.
பிறவாரியப் பள்ளிகளான CBSE, ICSE, IGCSE, IB ஆகியவற்றில் தமிழ்ப்பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பாட வல்லுநர்களைக் கொண்டு மண்டல வாரியாக, பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக சென்னை மண்டலத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சார்ந்த 900 தமிழ் ஆசிரியர்களுக்கு சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புத்தாக்கப்பயிற்சியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர், "குழந்தையின் மொழியை நிராகரிக்கும் போது, அந்தக் குழந்தையை நிரகரிப்பதற்கு இணையானது என மேலை நாட்டு கல்வியாளர் கம்மின்ஸ் குறிப்பிடுகிறார். தனியார் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் புத்தாக்கம் செய்வதற்கான பயிற்சி தான் இது. தமிழறிஞர் கருணாநிதி இன்று உயிரோடு இருந்திருந்தால் இந்த கட்டடம் கட்டியதற்கான காரணத்தை இன்று அடைந்ததாக கருதி இருப்பார்.
பாடங்களை முறையாக நீங்கள் நடத்தும் பொழுது மாணவர்களுக்கு உணர்வை ஊட்டுகின்றீர்கள். உங்களுக்கான அந்த அங்கீகாரத்தையும் கண்டிப்பாக பெறுவீர்கள். தனியார் பள்ளிக்கூடங்களுக்கு செல்லும்பொழுது தமிழ்மொழி கற்பிக்கப்படுகிறதா? என்பதையும் ஆய்வு செய்வேன். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கிறார் முதலமைச்சர்.
ஒவ்வொரு தனியார் பள்ளிகளும் தமிழ் மொழியை முறையாக நடத்தப்படுகின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்கின்ற ஆர்வத்தின் காரணமாகத்தான். இது போன்ற ஒரு புத்தாக்கப்பயிற்சி உங்களுக்கு வழங்கப்படுகிறது. புத்தாக்கப்பயிற்சி வழங்க வேண்டும் என்ற முதலமைச்சருடைய அறிவுத்தலின்படி, பள்ளி கல்வித்துறை சார்பில் வழங்கப்படுகிறது.
மேலும் மண்டல வாரியாக இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதை நல்ல விதத்தில் நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். பிற மாநில மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல், நமது மாணவர்களுக்கும் பயிற்சியை உறுதி செய்ய வேண்டும். இன்று நமது மாநில மாணவர்களே தமிழ் மொழியை பிற மொழி கலப்பில்லாமல் பேச முடியவில்லை.
பிற மொழியில் பேசினால் அதனை உள்வாங்கி கொள்ளலாம். ஆனால் தமிழ் மொழியில் மட்டும் பேசினால் தான் உணர்வு பூர்வமாக உள்வாங்க முடியும். தனியார் பள்ளி ஆசிரியர்கள் அரசு பள்ளிக்கு வந்து பார்க்க வேண்டும். ஒரு நாட்டை அழிக்க வேண்டும் என்றால் பெரிய போர் எல்லாம் தேவையில்லை, அந்தநாட்டின் தாய் மொழியை அழித்தாலே அது தானாக அழிந்து விடும்.
தமிழ் மொழிக்காக பலர் உயிரை தியாகம் செய்து உள்ளனர். தமிழ் மொழியை அனைத்து மாணவர்களும் கற்க வேண்டும் என்பதற்காக 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் கற்பதற்கான சட்டம் இயற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ் கற்பதற்கான விதிகள் 2012 ஆம் ஆண்டு வகுக்கப்பட்டது. அதனைத் எதிர்த்து பலர் நீதிமன்றம் கூட சென்றனர்.
ஆனால் தற்பொழுது 2014 - 15 ஆம் கல்வி ஆண்டு முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. 2024 - 25 ம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களும், தமிழ் வழியில் தேர்வு எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கைத்தான் பின்பற்றப்படுகிறது. எனவே தொடர்ந்து எந்த தொய்வும் இல்லாமல் உங்கள் தமிழ்மொழி பணியினை ஆற்றுங்கள், உங்கள் பணி தொடர தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: World Cup Cricket 2023 : உலக கோப்பைக்கான பாடல் வெளியீடு! ஐசிசி வெளியீடு!