தனியார் பள்ளிகளில் தமிழ் கட்டாயம்: அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி!

author img

By

Published : May 26, 2023, 10:17 AM IST

தனியார் பள்ளிகளில் தமிழ் கட்டாயம் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை

தனியார் பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக இருக்கிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

சென்னை: தனியார் பள்ளிகளில் தமிழ் கட்டாயமாக்கப்படுவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். வருகிற ஜூன் 1ஆம் தேதி, 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதேபோல், 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பள்ளிகள் திறக்கப்படும் நாளன்று மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், சீருடை உள்ளிட்ட அரசின் நலத்திட்ட பொருட்களை வழங்குவது தொடர்பாகவும், பள்ளிகளில் தமிழ் கட்டாயமாக்கப்படுவது குறித்தும், ஆசிரியர்களை நியமிப்பது குறித்தும், தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வருகிற ஜூன் 1ஆம் தேதி பள்ளிகளை திறக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் இருக்கும் என்றும் பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்தும், பள்ளித் தூய்மை, விலையில்லாப் பொருட்களை உடனே வழங்குவது, தமிழ் கட்டாயப் பாடம் என்பதை தனியார் பள்ளிகள் பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்பன போன்ற கருத்துக்களை அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

வரும் கல்வியாண்டு முதல் தமிழ் கட்டாய பாடம் என்பதை தனியார் பள்ளிகள் சரியாக பின்பற்றுகிறார்களா, தமிழாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிபடுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தமிழ் பாடத்தை கட்டாயம் படித்து இருக்க வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது.

அந்த சட்டத்திற்கு முழுமையான செயல் வடிவம் கொடுக்கும் வகையில், அடுத்த கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்கள் தமிழ் பாடத்தில் தேர்வு எழுத வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்கான பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகம் ஆகியவை ஏற்கனவே பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மேலும், பள்ளிகள் திறக்கும்போது நடப்பாண்டில் விலையில்லா பொருட்கள் சிலவற்றை உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவைகளும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாக பள்ளியில் திறக்கும் தேதியை மாற்றி அமைக்கலாமா என்பது குறித்தும் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்கள் உடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை பள்ளி திறக்கும் தேதியில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை.

இதையும் படிங்க: Anna University: விளையாட்டு பிரிவில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.