ETV Bharat / state

வருமான வரிக்கு வட்டி செலுத்த விலக்குகோரிய விவகாரம்: நடிகர் சூர்யா வழக்கு தள்ளுபடி!

author img

By

Published : Aug 17, 2021, 3:24 PM IST

வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி, நடிகர் சூர்யா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

mhc
சூர்யா

சென்னை: நடிகர் சூர்யா வீட்டில் கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் 2007-2008, 2008-2009 நிதி ஆண்டுகளுக்கான வருமான வரியை மதிப்பீடு செய்து 2011ஆம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் சூர்யா தரப்பிலும், வருமான வரி தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் 2007-08, 2008-09ஆம் ஆண்டுளுக்கு மூன்று கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரியை நடிகர் சூர்யா செலுத்த வேண்டும் என்ற வருமான வரித்துறை மதிப்பீட்டு அலுவலரின் உத்தரவை உறுதி செய்தது.

இந்நிலையில், தீர்ப்பாயத்தில் தனது வழக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முடிவு காணப்பட்டதால், வருமான வரிக்கு சட்டப்படி மாதம் ஒரு சதவிகிதம் வட்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரி, 2018ஆம் ஆண்டு நடிகர் சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த மனுவில், தான் முறையாக வரி செலுத்தி வருவதாகவும் தீர்ப்பாய கால தாமதத்திற்கு வருமானவரித் துறையே காரணம் என்பதால் வருமான வரி சட்டப்படி, வட்டி விலக்கு பெற தனக்கு உரிமை உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று (ஆக.17) விசாரணைக்கு வந்த போது, ”சோதனை நடந்த 45 நாள்களுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் சூர்யா தாமதமாகத்தான் கணக்கை தாக்கல் செய்தார்.

வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு தரவில்லை. சோதனைக்கு பிறகு வருமானம் குறித்த முழு விவரங்களை அளிக்கவில்லை என்பதால், வருமான வரி சட்டப்படி, வட்டி விலக்கு பெற சூர்யாவுக்கு உரிமை இல்லை” என வருமான வரித் துறை தரப்பில் வாதிடப்பட்டது.

வருமானவரித்துறையின் இந்த வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதி, நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: அர்ச்சகர்களை பணியிடை நீக்கம் செய்யவில்லை - முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.