ETV Bharat / state

பொங்கல் பரிசு முறைகேடு வழக்கு: அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு செப்.11ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 10:41 PM IST

அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி எதிரான வழக்கு! விரைவில் இறுதி விசாரணை
அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி எதிரான வழக்கு! விரைவில் இறுதி விசாரணை

Tamil Nadu govt Pongal gift scam case: பொங்கல் பரிசு வழங்கியதில் முறைகேடு செய்ததாக அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ.பெரியசாமி ஆகியோருக்கு எதிரான வழக்கு இறுதி விசாரணைக்காக செப்டம்பர் 11ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

சென்னை: பொங்கல் பரிசு வழங்கியதில் முறைகேடு செய்ததாக அமைச்சர்கள் சக்கரபாணி ஐ.பெரியசாமி ஆகியோருக்கு எதிரான புகாரில் நடவடிக்கை எடுக்க லோக் ஆயுக்தா அமைப்பிற்கு உத்தரவிடக் கோரிய வழக்கை இறுதி விசாரணைக்காகச் செப்டம்பர் 11ம் தேதிக்குச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,296 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, திருவள்ளூரைச் சேர்ந்த ஜெயகோபி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பிலிருந்த வெல்லம், கரும்பு, பருப்பு, புளி உள்ளிட்ட பொருட்கள் தரமற்றவையாகவும், உயிரிழந்த பூச்சிகள் காணபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தரமற்ற பொருட்கள் வழங்கியதன் மூலம் மக்கள் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக முதல்வருக்குப் புகார் அளித்ததாகவும், அதன் அடிப்படையில் தரமற்ற பொருட்கள் விநியோகத்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மாணவர்களிடையே அதிகரிக்கும் சாதிய மோதல்கள்.. தடுப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை!

தரமற்ற பொருட்களை வழங்கிய அதிகாரிகள், அவற்றைத் தடுக்காத உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஆகியோருக்கு எதிராக லோக் ஆயுக்தா அமைப்பில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதி என்.சேஷசாயி முன்பு இன்று (30.08.2023) விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை விசாரிக்கக் கூடிய அதிகாரம் பெற்ற அமைப்பாக லோக் ஆயுக்தா இருப்பதால், புகாரை விசாரிக்க உத்தரவிட வேண்டுமெனவும், இறுதி வாதங்களை முன்வைக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

அரசு தரப்பிலும் இறுதி வாதங்களை முன்வைக்க ஒப்புதல் தெரிவித்ததை அடுத்து, ஜெயகோபி தொடர்ந்த வழக்கை இறுதி விசாரணைக்காகச் செப்டம்பர் 11ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: கேஸ் சிலிண்டர் விலை குறைப்புக்கு புதுச்சேரி முதலமைச்சர் வரவேற்பு.. புதுச்சேரியில் எவ்வளவு விலை குறையும்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.