ETV Bharat / state

மேகதாது அணை விவகாரம்: டெல்லி சென்ற அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் பேட்டி

author img

By

Published : Jul 17, 2021, 10:38 AM IST

மேகதாது அணை விவகாரம்
மேகதாது அணை விவகாரம்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லி சென்ற அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் சென்னை திரும்பிய நிலையில் பேட்டியளித்தனர்.

சென்னை: மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. இதனை அனுமதிக்கக் கூடாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல்களை ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கிடம் வழங்க தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் டெல்லி சென்றனர்.

டெல்லியில் ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சரை சந்தித்து மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினர். டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் நேற்று (ஜூலை 16) இரவு சென்னை திரும்பினார். அப்போது, அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

ஆர்.எஸ். பாரதி பேட்டி

இது குறித்து ஆர்.எஸ். பாரதி- திமுக அமைப்புச் செயலாளர் கூறுகையில், “தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சார்பில் 13 பிரதிநிதிகள் ஒன்றிய அமைச்சரை சந்தித்தோம்.

முதலமைச்சர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஜல்சக்தி அமைச்சரிடம் மனுவாக தந்தோம். ஒரு மணி நேரம் தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினோம்.

உறுதியாக மேகதாது அணை கட்ட அனுமதி வழங்க மாட்டோம் என்ற ஒன்றிய அமைச்சர் உறுதியளித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு ஒரு பிரச்சினை என்றால் கட்சிகளை மறந்து தமிழ்நாட்டிற்காக குரல் தருவோம் என்பதை இக்குழு நிரூபித்துள்ளது. ஒன்றிய அமைச்சர் தந்த வாக்குறுதியும் நம்பிக்கையளித்துள்ளது” எனத் தெரிவித்தார்.

ஆர்.எஸ். பாரதி

திருமாவளவன் பேட்டி

தமிழ்நாட்டின் அனுமதியின்றி கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முடியாது என ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் உறுதியளித்தார். விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம்.

அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது.

மேலும், தமிழ்நாடு அரசும், கர்நாடக அரசும் ஒருங்கிணைந்து முடிவு எடுக்காமல் அங்கு அணை கட்ட வாய்ப்பில்லை என ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். இந்தச் சந்திப்பு மிகவும் நம்பிக்கை உடையதாக இருக்கிறது” என்றார்.

திருமாவளவன்

கே. பாலகிருஷ்ணன் (சிபிஎம்)

மேகதாது அணை விவகாரம் குறித்த விரிவான அறிக்கை தயாரிக்க, காவிரி மேம்பாட்டு ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும்.

அது சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதல் பெற வேண்டும், வனத்துறை அனுமதி பெற வேண்டும் போன்ற நான்கு நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்கப்படும். ஆனால், இதுவரை இவற்றில் ஒன்றை கூட கர்நாடக அரசு நிறைவேற்றவில்லை என ஒன்றிய அமைச்சரிடம் தெரிவித்தோம்.

விரிவான திட்ட ஆய்வறிக்கைக்கு அனுமதியளிக்க அதிகாரம் இல்லாதபோது அது செல்லாது என தமிழ்நாட்டின் சார்பில் வலியுறுத்தியுள்ளோம். மேகதாது அணை விவகாரத்தில் அரசியல் சார்பாக செயல்பட்டால் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளோம். நிச்சயம் மேகதாது அணையைக் கட்ட அனுமதிக்க மாட்டோம் என ஒன்றிய அமைச்சர் உறுதியளித்துள்ளார்” என்றார்.

கே. பாலகிருஷ்ணன்

கோபண்ணா பேட்டி

மேகதாது அணை தமிழ்நாடு அரசின் அனுமதியில்லாமல் கட்ட முடியாது என்ற ஒன்றிய அமைச்சர் உறுதி மொழியை மீறி பாஜக அரசியல் செய்தால் உச்ச நீதிமன்றத்தில் அது முறியடிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

கோபண்ணா

ஜி.கே. மணி பேட்டி:

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முதலமைச்சர் தலைமையில் ஒரே குரலில் ஒலிப்பதுதான் இப்பயணத்தின் நோக்கம். மேகதாது அணை கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்கு வராது. தமிழ்நாடு மிகப்பெரியளவில் பாதிப்பை சந்திக்கும் என்பதை எடுத்துக் கூறினோம்.

திட்ட அறிக்கைக்கு அனுமதி தந்தது தவறானது என்று எடுத்துரைத்தோம். எல்லோருடைய கருத்தையும் கேட்ட ஒன்றிய அமைச்சர், அணைகட்ட அனுமதி வழங்க முடியாது. ஒன்றிய அரசு பாரப்பட்சமாக நடந்து கொள்ளாது என்ற தகவலை சொன்னது நம்பிக்கை தருவது போல் இருந்தது” என்றார்.

kmani

ஜவாஹிருல்லா

கர்நாடகாவில் அணை இல்லாத நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்துதான் தமிழ்நாட்டிற்கு சுமார் 80 டி.எம்.சி. தண்ணீர் வருகிறது. 25 ஆண்டுகளாக நீர் இருந்தும் கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படுவதில்லை என ஒன்றிய அமைச்சரிடம் சுட்டி காட்டப்பட்டது. நடுநிலையாக செயல்படுவேன் என்று அவர் கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு இல்லாமல் எந்தக் கட்டுமானமும் தொடங்க முடியாது என்பதை ஒன்றிய அமைச்சர் சுட்டி காட்டினார். தமிழ்நாடு மக்களின் உரிமைகளை நிலைநாட்ட முதலமைச்சர் எடுத்த சீரிய முயற்சியால் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஒருமித்து குரல் எழுப்பியுள்ளோம். உரிமைகளை மீட்க ஒருமித்து போராடுவோம்” என்றார்.

ஜவாஹிருல்லா

இதையும் படிங்க: 'நீட்... மேகதாது... கொங்குநாடு...!' - டக் டக் என ஆன்சரை அடுக்கிய அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.