ETV Bharat / state

பட்டாசுக் கழிவுகள் அன்றைய தினமே அப்புறப்படுத்த நடவடிக்கை: சென்னை மேயர் பிரியா தகவல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 10:04 PM IST

Chennai Mayor Priya: சென்னையில் சேகரிக்கப்படும் பட்டாசுக் கழிவுகள், அன்றைய தினமே சாலை மற்றும் தெருக்களிலிருந்து அப்புறப்படுத்தி, முறையாக கும்மிடிப்பூண்டியில் உள்ள நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயர் ஆர்.பிரியா அறிவுறுத்தி உள்ளார்

சென்னையில் குவியும் பட்டாசு கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்
சென்னையில் குவியும் பட்டாசு கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்

சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சேகரமாகும் பட்டாசுக் கழிவுகளை தனியாக சேகரித்து அன்றைய தினமே அப்புறப்படுத்துதல் மற்றும் தீ விபத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், துணை மேயர் மு.மகேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் மேயர் ஆர்.பிரியா பேசுகையில், "தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் பட்டாசுக் கழிவுகளை தனியாக அதற்கான வைக்கப்பட்டுள்ள பைகளில் சேகரித்து முறையாக பதப்படுத்தும் நிலையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

இதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் கனரக வாகனங்களை இப்பணிகளுக்காக ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், தினந்தோறும் சேகரமாகும் பட்டாசுக் கழிவுகள் அன்றைய தினமே சாலை மற்றும் தெருக்களிலிருந்து அப்புறப்படுத்தி, பதப்படுத்தும் நிலையங்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். பின்னர், இந்தக் கழிவுகள் முறையாக கும்மிடிப்பூண்டியில் உள்ள நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பட்டாசுக் கழிவுகளை முறையாகவும் பாதுகாப்புடனும் கையாளுவது குறித்தும், குப்பைகளை தனியாகப் பிரித்து இல்லங்களில் குப்பை சேகரித்து சுத்தம் செய்ய வரும் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிட, பேட்டரியால் இயங்கும் வாகனங்களில் ஆடியோ மூலம் ஒலிபரப்பி விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் இந்தப் பணிகளை பரப்புரையாளர்கள், பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளவும், குப்பை கொட்டும் வளாகங்களில் தீ விபத்து ஏற்படாமல் தடுத்திட தீயணைப்புத் துறையின் மூலம் தகுந்த பாதுகாப்பு வாகனங்களை தயார் நிலையில் வைத்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திடவும் அறிவுறுத்தினார்.

பொதுமக்கள் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அரசின் வழிகாட்டுதலின்படி, குறிப்பிட்ட நேரத்தில் தகுந்த பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடித்திடவும், பட்டாசுக் கழிவுகளை தனியே சேகரித்து, அதனை தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கி மாநகராட்சிக்கு நல் ஒத்துழைப்பு வழங்கிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க நடவடிக்கை: கல்லூரிக் கல்வி இயக்குனர் முதல்வர்களுக்கு அறிவுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.