ETV Bharat / state

சென்னை புறநகர் ரயிலில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய நபர் - போலீசார் வலைவீச்சு

author img

By

Published : Mar 26, 2022, 9:45 PM IST

சென்னை புறநகர் ரயிலில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய நபர் - போலீசார் வலைவீச்சு
சென்னை புறநகர் ரயிலில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய நபர் - போலீசார் வலைவீச்சு

சென்னை புறநகர் ரயிலில் இரவு நேரத்தில் பட்டாக்கத்தியுடன் சுற்றித் திரிந்த நபரை ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர். புறநகர் ரயில்களில் குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

சென்னை: சென்னை வடக்கு கடற்கரை சாலை முதல் தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயில் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லக்கூடிய புறநகர் ரயில்களில் இரவு நேரங்களில் ஆயுதங்களுடன் சில நபர்கள் பயணித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக ரயில் படிக்கட்டில் நின்று செல்போன் பேசியவாறு பயணிக்கும் நபர்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபடுவது, இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் குறைவாக உள்ள ரயில் பெட்டியில் திடீரென ஆயுதங்களுடன் ஏறி வழிப்பறியில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் அண்மைக் கலமாக அதிகரித்துள்ளன.

சில தினங்களுக்கு முன்பு ஆவடியைச் சேர்ந்த சின்னசாமி என்ற நபர் ரயிலில் பயணிக்கும்போது, வியாசர்பாடி அருகே அவரது செல்போனை பறிக்க முயன்ற நபரை, சின்னசாமி தடுக்க முயன்றபோது ரயிலில் இருந்து கீழே விழுந்து அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதேபோல் கடந்த மாதம் மின்சார ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த இளம்பெண் முன்பு அமர்ந்து, இளைஞர் ஒருவர் ஆபாசமாகவும், அநாகரீகமாகவும் நடந்துகொண்ட சம்பவமும் அரங்கேறியது.

படிக்கட்டில் பயணம் செய்தவரிடம் பட்டாகத்தி

இந்நிலையில் நேற்று முன்தினம் தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில் ஆட்கள் குறைவாக இருந்த பெட்டியில் ஏறிய நபர் ஒருவர், மதுபோதையில் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்துள்ளார். அவர் பயணிக்கும் போது அவரது இடுப்பில் பட்டாக்கத்தி இருந்ததைக் கண்ட பயணி ஒருவர், அச்சமடைந்து தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து, கிண்டி ரயில் நிலையத்தில் அந்த நபரை பிடிக்க முற்பட்டபோது, அவர் தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து தப்பிச் சென்ற நபர் யார் என்பது குறித்து ரயில் நிலையங்களில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து, ரயில்வே போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவலர்களின் பற்றாக்குறையே காரணம்

இது குறித்து ரயில்வே போலீசாரிடம் கேட்டபோது காவலர்களின் பற்றாக்குறை காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும், காலிப் பணியிடங்களை நிரப்புவது மூலமாக அதிக காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரயில் நிலையங்கள் மூலமாக நடைபெறும் கஞ்சா கடத்தல், குழந்தை கடத்தல் மற்றும் சிறிய குற்றங்களை கண்காணித்து, அவர்களை கைது செய்யும் பல்வேறு பணிகளில் ரயில்வே போலீசார் ஈடுபடுவதால், ரோந்து பணி மற்றும் இரவு பாதுகாப்பு பணிகளுக்கு காவலர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் ரயில்வே போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

சுவாதி கொலை வழக்கிற்கு பிறகு பல்வேறு ரயில் நிலையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதலை வழங்கி உள்ளது. மேலும் நிர்பயா என்ற மத்திய அரசின் திட்டம் மூலம் பெண்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

இரவு நேரங்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் மற்றும் ரயில்வே போலீசார் பெண் பயணிகள் பயணிக்கும் பெட்டிகளில் பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பற்றாக்குறை காரணமாக பெண் காவலர்களும் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க:உறவில் இருந்த காதலி முகத்தில் திராவகம் வீசிய இளைஞர் - போலீசார் வலை வீச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.