ETV Bharat / state

சென்னையில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா செல்ல முயன்றவர் கைது

author img

By

Published : Dec 9, 2022, 10:25 AM IST

Updated : Dec 9, 2022, 10:35 AM IST

சென்னையில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் மலேசியா நாட்டிற்குச் செல்ல முயன்ற வங்கதேச இளைஞரை சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து மேல் நடவடிக்கைக்காக சென்னை குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்

சென்னையில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா செல்ல முயன்றவர் கைது
சென்னையில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா செல்ல முயன்றவர் கைது

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்படத் தயாராகிக் கொண்டு இருந்தது.

அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது மேற்கு வங்க மாநில முகவரி பாஸ்போர்ட்டுடன் பிபுல் மண்டல் (35) என்பவர் இந்த விமானத்தில் மலேசியா நாட்டிற்கு செல்ல வந்தார்.

ஆனால், குடியுரிமை அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவருடைய பாஸ்போர்ட்டை நவீன கருவி மூலம் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பாஸ்போர்ட் போலியான பாஸ்போர்ட் என்று தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பயணியின் பயணத்தை ரத்து செய்த குடியுரிமை அதிகாரிகள் அவரை தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவருடைய பெயர் விபுல் மண்டல். ஆனால் அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. இந்தியாவுக்குள் ஊடுருவி கொல்கத்தா சென்றுள்ளார். அங்கு போலி பாஸ்போர்ட் தயார் செய்து கொடுக்கும் ஏஜெண்டுகளை அணுகி பெருமளவு பணம் கொடுத்து இந்திய பாஸ்போர்ட் வாங்கியது தெரியவந்தது.

அதன் பின்பு அவர் கொல்கத்தாவில் இருந்து ரயிலில் சென்னை வந்து சென்னையில் இருந்து இந்த போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா நாட்டிற்குச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் வங்கதேச பயணியைக் கைது செய்து அவரிடம் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தினர். கொல்கத்தாவில் போலி பாஸ்போர்ட் வாங்கிவிட்டு சென்னைக்கு வந்து விமானத்தில் மலேசியா செல்ல முயன்றது ஏன்? சென்னையில் அவருடைய கூட்டாளிகள் யாராவது இருக்கின்றனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்தனர்.

அதன் பின்பு மேல் நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு விரைந்து வந்து வங்கதேச பயணியை தங்களுடைய பொறுப்பில் எடுத்துக்கொண்டு சென்னையில் உள்ள அவர்கள் அலுவலகம் கொண்டு சென்று மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தீவிரமடையும் மாண்டஸ் புயல்: தமிழ்நாட்டில் 31 மாவட்ட பள்ளிகளுக்கு லீவ்.. 3 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'

Last Updated :Dec 9, 2022, 10:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.