ETV Bharat / state

'நான் நிஜ வாழ்க்கையில் நடிக்கமாட்டேன்..!' - கமல்ஹாசன் உருக்கம்

author img

By

Published : Jul 17, 2022, 6:59 PM IST

’நான் நிஜ வாழ்க்கையில் நடிக்க மாட்டேன்..!’ - கமல்ஹாசன்
’நான் நிஜ வாழ்க்கையில் நடிக்க மாட்டேன்..!’ - கமல்ஹாசன்

'எனக்கு நன்றாக நடிக்க வரும்; ஆனால் நிஜ வாழ்க்கையில் நடிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்' என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை மாங்காடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள், மண்டலச் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் என சுமார் 600 பேர் பங்கேற்றனர்.

’நான் நிஜ வாழ்க்கையில் நடிக்க மாட்டேன்..!’ - கமல்ஹாசன்
’நான் நிஜ வாழ்க்கையில் நடிக்க மாட்டேன்..!’ - கமல்ஹாசன்

இந்தக் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், மக்களவைத் தேர்தலில் வெற்றிக்கான வியூகத்தை வகுப்பது தொடர்பாகவும் கட்சியினருக்கு கமல்ஹாசன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், “மாற்றத்திற்காக அரசியலுக்கு வந்துள்ளேன். சினிமாவில் நடிக்கும் இவர் அரசியலில் நீடிப்பாரா என்று கேட்கிறார்கள். நான் அரசியலில் எப்போதும் இருப்பேன்.

'தோல்வியைக் கண்டு துவண்டுவிடக்கூடாது': காந்தி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார் என்று சொன்னால் ஆர்.எஸ்.எஸ்காரர்களுக்கு கோபம் வந்துவிடும். மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை விளக்கம் விரைவில் வெளியிடப்படும். வெற்றியின் மறுபக்கம் தான்தோல்வி,தோல்வியைக் கண்டு துவண்டால், இன்று 'விக்ரம்' படம் இல்லை.

நான் கட்சியில் ஒருவரை மதித்து என் மடியிலேயே வைத்திருந்தேன். பாதியிலேயே எனக்கு சந்தேகம் வந்தது. அவர் எனக்கு துரோகம் செய்துவிட்டார். அவர் துரோகி தான். எனது தேவை 39 பேர் வேண்டும், 234 பேர் வேண்டும். அவர்களுக்குத் தலைமை என்னும் தகுதி வேண்டும்.

நாணம் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டோம். அதையே சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள். இப்போது உச்சியில் சூரியன் இருக்கிறது. நாம் ஓடுவதை நிறுத்திவிட்டால், சிங்கம் விரட்டும் மான்களாகி வேட்டையாடப்படுவோம். எனக்கு நிறைய மனம் புண்படுகிறது. ஆனால், நான் அழமாட்டேன்.

ஆட்சியாளர்களுக்குத்தான் அவமானம்: நாட்டை விட்டுப்போவேன் என்று நான் சொன்னது எனக்கு அவமானம் இல்லை. ஆட்சியில் இருந்து ஆண்டவர்களுக்குத்தான் அவமானம். மக்கள் நீதி மய்யம் கட்சியே போராடும் கட்சி தான். அம்பானி, அதானியிடம் இல்லாத ஒன்று நம்மிடம் இருக்கிறது அதுதான் மக்கள் பலம்.

நாட்டின் பணிகளைக் கட்சி நிர்வாகிகளான உங்களிடம் கொடுத்துள்ளேன். கிராமசபைக் கூட்டங்களுக்காக குரல் கொடுத்தவர்கள் மக்கள் நீதி மய்யத்தினர். ஆனால், இப்போது சிலர் கிராம சபைக் கூட்டங்களை அவர்களே கண்டுபிடித்தது போன்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நல்ல தலைவன் நல்ல தொண்டர்களால் தான் நிர்ணயிக்கப்படுவான். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் கட்சிக்காக உழையுங்கள். பஞ்சாயத்து செய்யாமல் மக்கள் பஞ்சாயத்துகளில் கவனம் செலுத்த வேண்டும்.

கமல்ஹாசனின் முதல் ரசிகனும் முதல் விமர்சனம் செய்பவனும் கமல்ஹாசன் தான். நேர்மை என்பது ஆயுதம்; கடமை என்பது கேடயம்’ என்றார்.

அப்போது பிற கட்சித் தலைவர்களை மக்கள் நீதி மய்யத்தில் இணைக்க வேண்டும் என்ற மாவட்டச்செயலாளர்களின் கோரிக்கைக்குப் பதில் அளித்த கமல்ஹாசன், ”அவர்களை நாம் சாக்கடை என்று சொல்கிறோம். அவர்களை இணைத்து அந்த தவறை நாம் செய்யக்கூடாது.

எனக்கு நன்றாக நடிக்க வரும். ஆனால் நிஜ வாழ்க்கையில் நடிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஒரு ஊரில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கொடி இருக்கிறதா என்பதை விட ஒரு ஊரில் மக்கள் நீதி மய்யத்தால் மரம் வளர்க்கப்பட்டுள்ளதா? என்பதுதான் முக்கியம்" எனப் பேசினார்.

முன்னதாக சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த அதிமுகவின் அம்மா பேரவை நிர்வாகிகள் சைதை கதிர் தலைமையில் 300 பேர் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர்.

இதையும் படிங்க: அமீர்கான் படத்தை தமிழில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.