சென்னை: மதுரை மாவட்ட பாஜக பொறுப்பாளராக பதவி வகித்து வந்த மருத்துவர் சரவணன், கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரை விமான நிலையத்தில் நிகழ்ந்த பாஜக - திமுகவினர் மோதல் தொடர்பான விவகாரத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பாஜகவில் இருந்து விலகினார்.
அதனைத் தொடர்ந்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய சரவணன், திமுகவில் இணையப்போவதாக தகவல் வெளியானது. அது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூட தாய் கழகத்தில் இணைவதில் என்ன தவறு என கருத்து தெரிவித்திருந்தார்.
இதனிடையே, திமுகவில் சீட்டு கிடைக்காததால் விலகிச் சென்று, திமுகவுக்கு எதிராக திவீர அரசியல் செய்த சரவணனை மீண்டும் கழகத்தில் இணைக்கக் கூடாது என திமுக நிர்வாகிகள் பலரும் தலைமைக்கு புகார் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், மீண்டும் பாஜகவில் இணைய சரவணன் முடிவெடுத்ததாகவும் அதனை அண்ணாமலை தரப்பு தவிர்த்துவிட்டதாகவும் தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
இப்படிப்பட்ட அரசியல் சூழலில் யாரும் எதிர்பாராதவிதமாக இன்று காலை சென்னையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய மருத்துவர் சரவணன், தன்னை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக்கொண்டார்.
திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரவணன் பேசியதாவது, "இப்போது உள்ள திமுக ஆட்சிக்கு பதில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை இருந்திருக்கலாம் என மக்கள் பேசுகின்றனர். இந்த சூழலில் தான் நான் ஈர்க்கப்பட்டு அதிமுகவில் இணைந்துள்ளேன். இடைத்தேர்தலில் ஜெயலலிதா கையெழுத்து விவகாரம், மக்கள் பிரச்சனையாக தான் இருந்தது. அதில் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை.
நான் ஒரு மருத்துவர், சமூக சேவகர், அதனால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் அதிமுகவில் இணைந்துள்ளேன். மதுரையில் அமைச்சர் மீது காலணி வீசிய சம்பவத்தால் நான் பாஜகவில் இருந்து விலகினேன். விலகிய பிறகு திமுகவில் இணை உள்ளதாகவும் தனி கட்சி தொடங்கியுள்ளதாகவும் செய்திகள் வந்தன. ஒரு ஆட்சியின் நான்கு ஆண்டுகள் கடந்த பிறகு தான் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும். ஆனால் திமுக ஆட்சி ஒரு வருடங்களை கடந்திருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுதியுள்ளது. இனி வரும் காலங்களில் அதிமுக தொண்டர்களின் எண்ணங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக செயல்படுவேன்" என கூறினார்.
இதையும் படிங்க: ஆவின்: முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேர் நீக்கம்