ETV Bharat / state

வெள்ள நிவாரண நிதி.. டோக்கன் முறையில் வழங்க எதிர்ப்பு - நீதிமன்றம் தெரிவித்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 1:35 PM IST

Flood relief fund: மக்களுக்கு வெள்ள நிவாரணம் உடனடி தேவை என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இடைக்கால உத்தரவு பிறப்பித்து அதை தாமதப்படுத்த முடியாது எனக் கூறி, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டது.

madras high Court refuses to interfere with the distribution of flood relief fund
வெள்ள நிவாரண நிதி

சென்னை: மிக்ஜாம் (Michaung) புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரொக்கமாக வழங்கப்படும் இந்த நிவாரணத் தொகையை சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவரும், நிவாரணத் தொகையை அதிகரித்து வங்கிக் கணக்கில் வழங்க வேண்டும் என சட்டக் கல்லூரி மாணவர் செல்வகுமார் என்பவரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ரொக்கமாக நிவாரணத்தை வழங்கும்போது முறையானவர்களுக்கு சென்றடையாது என்றும், கடந்த 2015ஆம் ஆண்டு பெருவெள்ளத்தின் நிவாரணத் தொகை வங்கிக் கணக்கில்தான் செலுத்தப்பட்டது எனத் தெரிவித்தனர்.

மேலும், டோக்கன் முறை மூலம் நிவாரணம் வழங்குவது தவறாக பயன்படுத்தக்கூடும் என்றும், பலர் ஒரு முறைக்கு மேல் நிவாரணத்தை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்றும் கூறி, அதனால் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்த உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில் ஏற்கனவே 37 லட்சம் குடும்பத்தினர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், டோக்கன்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தலைமை நீதிபதி அமர்வு, வெள்ள நிவாரணம் என்பது உடனடியாக வழங்க வேண்டியது, ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், நிவாரணம் வழங்குவதை தாமதப்படுத்த முடியாது, அதை மறுக்க முடியாது, நிவாரணத்தை முடக்க முடியாது என்று தெரிவித்தது.

மேலும், நிவாரணம் வழங்குவது தற்போதைய நேரத்தில் உடனடி தேவை என்பதால், இந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை என்று நீதிபதிகள் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

நிவாரணம் வழங்குவதை தாமதப்படுத்துவது மக்கள் நலனுக்கு உகந்ததல்ல என்றும், உண்மை பயனாளிகளுக்கு நிவாரணம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். மேலும், அன்றைய தினம் நிவாரணம் வழங்கியது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு; எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.