அமைச்சர் எ.வ.வேலு மனைவி மீதான வழக்கு; உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் எ.வ.வேலு மனைவி மீதான வழக்கு; உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
Minister EV Velu wife: அமைச்சர் எ.வ.வேலுவின் மனைவி நிர்வகிக்கும் அறக்கட்டளை அரசு நிலத்தை ஆக்கிரமித்து பொறியியல் கல்லூரி கட்டியதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்யும்படி மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: திருவண்ணாமலையில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து அமைச்சர் எ.வ.வேலுவின் மனைவி கல்லூரி கட்டுவதாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது
திருவண்ணாமலையைச் சேர்ந்த டி.எஸ்.சங்கர் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், மாத்தூரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை அமைச்சர் எ.வ.வேலுவின் மனைவி ஜீவா தலைவராகக் கொண்ட திருவண்ணாமலை சரஸ்வதி அம்மாள் கல்வி அறக்கட்டளை ஆக்கிரமித்து, பொறியியல் கல்லூரி கட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல், ஆக்கிரமித்த நிலத்திற்கு பட்டா வாங்கி கல்லூரி தொடங்க அனுமதி பெற்றுள்ளதாகவும், அரசியல் அதிகாரம் கொண்டவர் என்பதால் அரசு நிலத்தை வாங்கி, அதில் கல்லூரி கட்டியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். எனவே, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ளதால், கல்லூரி கட்ட வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டுமென கடந்த மாதம் மத்திய கல்வி அமைச்சகத்திற்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தாகவும், அதன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த மனு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா , நீதிபதி பரத சக்கவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜி.உமா மகேஸ்வரி ஆஜரானார். இதனையடுத்து, புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கல்லூரி கட்டப்பட்டுள்ளதாக கூறுவதற்கு என்ன ஆதாரம் உள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
