ETV Bharat / state

மாஜி அமைச்சர் ஆவடி நாசருக்கு எதிரான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 10:51 PM IST

Madras high court
சென்னை ஐகோர்ட்

Madras high court: திமுகவைச் சேர்ந்த முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் தொடர்பான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை: கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட நாசர், வாக்களர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாகவும், அதை தடுக்க முயன்ற தன்னை ஆபாசமாக பேசியதுடன், காரை ஏற்றி கொலை முயற்சி செய்ததாகவும் அதிமுகவைச் சேர்ந்த தீனதயாளன் என்பவர் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், நாசர் மீது மிரட்டல், அவதூறாக பேசுதல், தாக்க முயற்சித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆவடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், பூந்தமல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நாசர் தரப்பில் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நாசர் தரப்பில் தனக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தெளிவற்றதாக உள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, விசாரணையின் போது மட்டுமே குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறை நிரூபிக்க முடியும் என்பதால், நாசர் இந்த வழக்கை எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறி வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், நாசர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளதால், விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து பூந்தமல்லி நீதிமன்றம் பரிசீலிக்கும் படியும் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சபரிமலையில் என்ன நடக்கிறது..? அதற்கான தீர்வுதான் என்ன..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.