ETV Bharat / state

ஈபிஎஸ்-க்கு எதிரான தேர்தல் வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

author img

By

Published : Jul 12, 2023, 7:22 PM IST

எதிர்கட்சித்தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தேர்தல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை நடத்த காவல்துறையினருக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: கடந்த 2021 நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது தேர்தல் வேட்பு மனு மற்றும் பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரம் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளதால் அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யும்படியும், இதுகுறித்து மே 26ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும், சேலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாமென காவல்துறைக்கு அறிவுறுத்தியது. இந்நிலையில் இந்த உத்தரவை மீறி, சேலத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் தனது கணக்கு குறித்த விவரங்களை கேட்டுப் பெற்றுள்ளதாக கூறி, சேலம் மத்திய குற்றப் பிரிவு ஆய்வாளர் புஷ்பராணி, உதவி ஆய்வாளர் குணசேகர் ஆகியோருக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் மேலும், ஈரோட்டில் 1973-76-ஆம் ஆண்டுகளில் தான் படித்த ஸ்ரீவாசவி கல்லூரிக்கு போலீசார் கடிதம் எழுதியுள்ளதாகவும், வழக்கை பெரிதுபடுத்த வேண்டாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், விசாரணையை தொடர்ந்து மேற்கொள்வது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்பதால், இரு அதிகாரிகளையும் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று (ஜூலை 12) விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், சேலம் மத்திய குற்றப் பிரிவு ஆய்வாளர் புஷ்பராணி, உதவி ஆய்வாளர் குணசேகர் ஆகியோர் தங்கள் செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி நீதிமன்றத்தில் பிராமணப் பத்திரம் தாக்கல் செய்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சேலம் குற்றப்பிரிவு காவல்துறையில் பதிவு செய்துள்ள தேர்தல் குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கில் விசாரணையை நடத்தி இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை, காவல்துறை விசாரணை நடத்த தடை விதித்தும் உத்தரவிட்ட நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: பாஜகவுக்கு அடுத்தடுத்து செக்... உத்தரகாண்ட் அரசியல் நிலவரத்தை ஆராயும் ராகுல்... காங். திட்டம் பலிக்குமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.