ETV Bharat / state

நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை!

author img

By

Published : Feb 17, 2022, 9:59 PM IST

நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: சைதாப்பேட்டையைச் சேர்ந்த மகா காந்தி மருத்துவப் பரிசோதனைக்காக மைசூரு செல்வதற்காக கடந்த நவம்பர் 2ஆம் தேதி இரவு பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராதவிதமாகச் சந்தித்தார்.

அப்போது, அவரின் சாதனைகளைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்ததாகவும், ஆனால் தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுப்படுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றித் தவறாகப் பேசியதாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

அதில், "உண்மைச் சம்பவங்கள் இவ்வாறிருக்க, மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்பப்பட்டது. எனவே நடிகர் விஜய் சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

விளம்பர நோக்குடன் வழக்கு

இந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை 9ஆவது பெருநகர உரிமையியல் நீதிமன்றம், விஜய் சேதுபதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, அழைப்பாணையை ரத்துசெய்யக் கோரியும், வழக்கை ரத்துசெய்யக் கோரியும் விஜய் சேதுபதி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று (பிப்ரவரி 17) விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் சேதுபதி தரப்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி, பெங்களூரு எல்லை தொடர்புடைய வழக்கை சென்னையில் தொடர்ந்தது.

அதை சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது, இயந்திரத்தனமாக உடனடியாக அழைப்பாணை அனுப்பியது, சமரசம் ஏற்பட்டதை மறைத்து அவதூறு வழக்கு என அடுத்தடுத்த தவறுகள் நடந்துள்ளதாக வாதிட்டார். விளம்பர நோக்கத்துடன் மூன்று கோடி ரூபாய் இழப்பீடு கேட்டுள்ளதால் அதிகப்படியான அபராதத்துடன் வழக்கை ரத்துசெய்ய வேண்டுமென வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: ரத்த தானத்தை வலியுறுத்தி 21 ஆயிரம் கிமீ நடக்கும் சமூக சேவகர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.