ETV Bharat / state

சுரானா நிறுவன மோசடி; இயக்குநர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2023, 8:36 PM IST

mhc-dismissed-surana-directors-bail-petition-about-money-laundering-charges
வங்கி கடன் மோசடி வழக்கில் சுரானா நிறுவன இயக்குநர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Madras High Court: ரூ.4 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடி தொடர்பாக, சுரானா நிறுவன இயக்குநர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள வழக்கை ஆறு மாதங்களில் விசாரித்து முடிக்கும்படி, சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சுரானா நிறுவனம் ஐடிபிஐ, எஸ்.பி.ஐ உள்ளிட்ட வங்கிகளிடம் இருந்து சுமார் 4,000 கோடி ரூபாய் கடனை பெற்றுத் திருப்பி செலுத்தாமல், பல்வேறு போலி நிறுவனங்களின் பெயரில் சட்ட விரோதமாகப் பணப் பரிமாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக, சுரானா குழுமத்தைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள், நிறுவனத்தின் இயக்குநர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா, ராகுல் தினேஷ் சுரானா, ஊழியர்கள் பி.ஆனந்த் மற்றும் ஐ.பிரபாகரன் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில், எந்த காரணமும் குறிப்பிடாமல் தனக்கு காவல் நீட்டிப்பு வழங்கியதை ரத்து செய்யக் கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும், தினேஷ் சந்த் சுரானா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கில் புலன் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், புலன் விசாரணை முடிவடையாத காரணத்தால் சட்டப்பூர்வமாக ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட வேண்டும் எனவும் தினேஷ் சந்த் சுரானா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை தரப்பில், புலன் விசாரணை முடிவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், விசாரணை முடிவடையவில்லை எனக் கூற முடியாது எனவும், குற்றத்தின் மூலம் பெற்ற பணத்தை வேறு எங்கெல்லாம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என மேல் விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், காவல் நீட்டிப்புக்கு காரணம் தெரிவிக்கப்பட வேண்டியதில்லை என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அமலாக்கத்துறை வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், காவல் நீட்டிப்பை ரத்து செய்யவும், ஜாமீன் வழங்கவும் மறுத்து, இது தொடர்பாக தினேஷ் சந்த் சுரானா தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதேபோல, வீட்டுக்காவலில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், இந்த வழக்கை 6 மாதங்களில் விசாரித்து முடிக்கும்படி சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை விரைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.. மசோதா விவகாரத்திற்கு முடிவு எட்டப்படுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.