ETV Bharat / state

விஷாலின் மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 10:49 PM IST

Etv Bharat
Etv Bharat

MHC ban Vishal's Mark Antony: நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது.

இது சம்பந்தமாக விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடனை திருப்பிச் செலுத்தாமல் உத்தரவாதத்தை மீறி, "வீரமே வாகை சூடும்" என்ற படத்தை வெளியிட தடை கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 15 கோடி ரூபாயை உயர் நீதிமன்ற பதிவாளர் பெயரில் வங்கியில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்யவும், சொத்து விபரங்களை தாக்கல் செய்யும்படியும் நடிகர் விஷாலுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து, தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தரப்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வு, 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் விஷால் செலுத்த வேண்டுமென்ற உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.

அவ்வாறு செலுத்தாவிட்டால், தனி நீதிபதியிடம் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படங்களை திரையரங்கம் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டு, மேல்முறையீடு வழக்கை முடித்து வைத்தனர்.

இந்த நிலையில், விஷாலின் "மார்க் ஆண்டனி" திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆஷா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, உயர் நீதிமன்ற உத்தரவின்படி 15 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்படவில்லை என்பதால், விஷாலின் புதிய படத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார். சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் ட்ரைய்லர் இணைய தளத்தில் வெளிவந்து மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கொண்டாடி கொளுத்தனும் தீ... இங்கிலாந்தில் முன்பதிவில் சாதனை படைத்த லியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.