ETV Bharat / state

நிர்மலா சீதாராமன் பிரமாண்ட பொய்யை கூறுகிறார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கு!

author img

By

Published : Aug 11, 2023, 7:02 AM IST

நிர்மலா சீதாராமன் பிரமாண்ட பொய்யை கூறுகிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நிர்மலா சீதாராமன் பிரமாண்ட பொய்யை கூறுகிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மாடு தாக்கியதில் காயமடைந்த குழந்தையை நேரில் சந்திக்கச் சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரமாண்ட பொய்யை கூறுவதாக தெரிவித்தார்.

சென்னை: சூளைமேட்டைச் சேர்ந்த குழந்தை ஆயிஷா, நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார். இந்த நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (ஆகஸ்ட் 10) குழந்தையை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் ஹர்சின் பானு. இவரது மூத்த மகள் ஆயிஷா(9). இவர் எம்எம்டிஏ காலனியில் உள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல் பள்ளி முடிந்ததும் தாய் ஹர்சின் பானு அவரது இரு மகள்களையும் வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, எம்.எம்.டி.ஏ காலனி ஆர் பிளாக் இளங்கோ தெரு வழியாக நடந்து சென்றபோது சிறுமி ஆயிஷாவை மாடு கொம்பால் குத்தி தூக்கி வீசியது. பின்னர் கீழே விழுந்த சிறுமியை மாடு விடாமல் குத்திய நிலையில், அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டு கற்களை மாடு மீது வீசி சிறுமியைக் காப்பாற்றினர்.

தற்போது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாட்டின் உரிமையாளர் விவேக் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைக்கு தற்போது அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மாடு முட்டும் காட்சி மனதை பதைபதைக்க வைக்கிறது. சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அந்த சிறுமிக்கு இரண்டு இடத்தில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. சி.டி ஸ்கேன் எடுத்ததில் தலையில் பாதிப்பு இல்லை என்றும், கையில் எழும்பு முறிவு எதுவும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. கண்ணில்தான் சிறிது ரத்தக் கசிவு இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர்" என கூறினார்.

இதையும் படிங்க: "திமுக இரட்டை வேடம் போடும் கட்சியாக உள்ளது" - எடப்பாடி பழனிசாமி

அதனைத் தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் தாமதத்திற்கு தமிழ்நாடு அரசே காரணம் என்ற நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் கூறியது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தொடர்ந்து பதில் அளித்த அமைச்சர், “நிதித் துறை அமைச்சர் போன்று உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார். உண்மைக்கு மாறாக பதிலளித்துள்ளார். மக்களை குழப்பிக் கொண்டிருக்கிறார்.

எய்ம்ஸ் மருத்துவமனை காலதாமதம் ஆவதற்கு மாநில அரசுதான் காரணம் என்று கூறுவது முற்றிலும் தவறுதான். பிரமாண்ட பொய்யைக் கூறுகிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்தியாவில், 2015இல் 7 மருத்துவமனைகள், 2017இல் 3 மருத்துவமனைகள், 2019இல் 1 மருத்துவமனை என 12 மருத்துவமனை அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதில் சில மருத்துவமனைகளில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. சில மருத்துவமனைகளில், வகுப்புகள் தொடங்கி விட்டன. சில மருத்துவமனைகள் மூழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. அதேபோல் கடந்த ஆண்டு மணிப்பூர் மற்றும் கர்நாடகத்தில் 2 மருத்துவமனைகள் அறிவித்த நிலையில், அதற்கு நிலம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.

மேலும் அவர், “இன்று நிதி அமைச்சர் தமிழ்நாடு அரசு நிலம் சரியாக தேர்வு செய்யவில்லை என்று கூறுவது நியாயம் இல்லை. நிலம் ஆர்ஜிதம் செய்தால் இடத்திற்கு எப்படி 4 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் வந்து அடிக்கல் நாட்ட முடியும்? மாவட்ட ஆட்சியரகத்திற்கு சொந்தமாக 222.47 ஏக்கர் இடம் உள்ளது.

அது கடந்த ஆட்சியில் மத்திய அரசால் மாற்றப்பட்டுள்ளது. அந்த இடத்தில்தான் பிரதமர் அடிக்கல் நாட்டினார். மேலும் அதைத் தொடர்ந்து அதிகாரிகள் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்றனர். அதைத் தொடர்ந்து, ரூ.15 கோடியில் சுற்றுச்சுவர் கட்டியது எப்படி? அவர்களின் முடியாத இயல்புக்கு தமிழ்நாடு அரசை குறை கூறுவது நியாயம் இல்லை. மத்திய அரசு மதுரை எய்ம்ஸ்-க்காக செய்த ஒரே செயல், ரூ.15 கோடியில் சுற்றுச்சுவர் கட்டியதுதான்” என கூறினார்.

மேலும், “2015, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட எய்மஸ் மருத்துவமனைகளின் வேலைகள் தொடங்கிவிட்டது. மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருச்சியில் எலியை வாயால் கடித்து நூதன முறையில் போராடும் விவசாயிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.