ETV Bharat / state

தென் மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பயன்படுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 2:22 PM IST

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Health Minister Ma Subramanian: தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக, மக்கள் கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரையோ அல்லது குளோரினேசன் செய்யப்பட்ட தண்ணீரையோ மட்டுமே குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் பயன்படுத்துமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை: தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மட்டும் உபயோகப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளதாவது, “தென் மாவட்டங்களில் பெய்த கனமழையைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கக்கூடிய நீர் ஆதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

எனவே, பொதுமக்கள் சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் மட்டுமே பருக வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். கொதிக்க வைத்த, ஆற வைத்த தண்ணீரையோ அல்லது குளோரினேசன் செய்யப்பட்ட தண்ணீரையோ மட்டுமே குடிப்பதற்கும் சமையல் செய்வதற்கும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. குடிநீர் லாரிகள் மற்றும் இதர வாகனங்கள் மூலம் வழங்கப்படும் நீரின் பாதுகாப்பினை உறுதி செய்த பின்னரே உபயோகிக்க வேண்டும்.

மேலும் தேங்கியுள்ள தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றிய பின்னர், வெள்ள நீர் உட்புகுந்த மேல்நிலை மற்றும் கீழ்நிலை தொட்டிகளை பிளிச்சிங் பவுடர் கொண்டு நன்கு கழுவி சுத்தம் செய்த பின்னர் உபயோகிக்க வேண்டும். சுகாதாரமற்ற குடிநீரைப் பருகுவதால் வயிற்றுப்போக்கு, காலரா உள்ளிட்ட நீரினால் பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் இந்த அறிவுரையை தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், பாதுகாக்கப்பட்ட தண்ணீரை வழங்குவதை உறுதி செய்திட உள்ளாட்சித் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மூலம் பொது சுகாதாரத்துறை வல்லுநர்கள், மருத்துவ அலுவலர்கள், நீரியல் பகுப்பாய்வாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் களப்பணி ஆற்றி, உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி மழை பாதிப்பு.. மீட்புப் பணியில் ஈடுபட்ட கிராம இளைஞர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.