ETV Bharat / state

"அடுப்புல ஆரம்பிச்சு, இடுப்புல முடிஞ்சிருச்சே குமாரு" - பிக் பாஸ் வீட்டில் அடுத்தடுத்த சரவெடி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 5:03 PM IST

Updated : Oct 5, 2023, 5:21 PM IST

Bigg Boss 7 Tamil: பிக் பாஸ் என்றாலே சண்டைக்கும், போட்டிக்கும் பஞ்சமே இல்லை என மக்கள் மனதில் பதிந்த நிலையில், இலக்கிய குழப்பம் வீட்டிற்குள் முதல் முறையாக அடியெடுத்து வைத்திருப்பது பிக் பாஸ் கண்ணோட்டத்தை சற்று மாற்றியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் அடுத்தடுத்த சரவெடி
பிக் பாஸ் வீட்டில் அடுத்தடுத்த சரவெடி

சென்னை: காதல், சண்டை, கலவரம் இவையெல்லாம் இல்லை என்றால் பிக் பாஸ் வீட்டிற்கு என்ன மரியாதை என்பதைப் போல, ஒவ்வொரு சீசனிலும் வீடு இரண்டாகிவிடும். ஆனால் இந்த சீசனில் புதிய ட்விஸ்ட்டாக, வீட்டையே இரண்டாக்கி போட்டியாளர்களை உள்ளே அனுப்பியுள்ளனர். "இது புதுசா இருக்குனே, ரொம்ப புதுசா இருக்கு" என பார்வையாளர்கள் எண்ண, முதல் நாளிலேயே கேப்டனுக்கான டாஸ்க் (Task), ஆறு பேர் வெளியேற்றம், அதிரடி நாமினேஷன் என்று வீடே அதகளமானது.

"பொறும சாமி பொறும" என பார்வையாளர்களின் மயின்ட் வாய்ஸ் (Mind Voice) ஒருபுறம் ஓட, இந்த பக்கம் காதலா? நட்பா? என அடையாளம் தெரியாத கருத்து பரிமாறல் ரவீணாவுக்கும், மணிச்சந்திராவுக்கும் இடையே மலர்ந்து கொண்டிருக்கிறது. காதலோ, நட்போ நமது கண்களுக்கு முதலில் படுவது சண்டைதானே? அதற்கு முதல் வித்துதான் போட்டியாளர் பிரதீப். எப்பொழுதும் எதையோ சிந்தித்துக்கொண்டே இருக்கும் பிரதீப், சரியான நேரத்தில், சம்பந்தமே இல்லாமல் சண்டைக்கோழியாக மாறிவிடுகிறார்.

பிக் பாஸ் (Bigg Boss) வீட்டிற்கும், ஸ்மால் பாஸ் (Small Boss) வீட்டிற்கும் இடையே கொளுத்தி போட நினைத்த பிரதீப், மங்களகரமாக அதை அடுப்பங்கரையில் இருந்து ஆரம்பித்து வைத்தார். ஆனால் என்ன, இவர் பட்ற வைத்த நெருப்பு இவருக்கே திரும்பிவிட்டது. கூல் சுரேஷ் தான் வீட்டில் பெரிய பிரச்னையாக இருப்பார் என எதிர்பார்த்தால், அந்த பட்டம் தனக்கு தான் வேண்டுமென அடம் பிடிக்கிறார் பிரதீப். எப்படியோ "நம்ம தல கெத்துப்பா" என கூல் சுரேஷின் ரசிகர்கள் கூலாக உள்ளனர்.

யார் எப்படியோ போகட்டும், நமக்கு கமல்ஹாசன் கொடுத்த வேலைதான் முக்கியம் என ஹவுஸ் மேட்ஸ்-ஐ (Housemates) ஒன்று திரட்டிய பவா செல்லதுரை, தனது கதையை தொடங்கினார். போனமுறை எழுத்தாளர் ஆதவனின் 'ஓட்டம்' கதையை உணர்ச்சிகரமாக கூறிய பவா செல்லதுரை, இந்த முறை பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய 'சிதம்பரம் நினைவுகள்' பற்றி பேசினார். மலையாள எழுத்துலகில் புகழ்பெற்ற கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.

இவர் தன் வாழ்க்கையில் கடந்த சம்பவங்களை உண்மைத்தன்மை மாறாமல் கட்டுரையாக எழுதியிருக்கிறார். அதன் மொழிபெயர்ப்பு தான் 'சிதம்பரம் நினைவுகள்'. அந்த கட்டுரைகளில் ஒன்றின் சுருக்கத்தை தனது பானியில் கூறிய பவா, வேலை பார்த்துக்கொண்டிருந்த பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, மதிய வேளையில் லீவு போட்டு வீட்டில் படித்துக்கொண்டிருந்தார். அப்போது, ஊறுகாய் விற்க வந்த பெண் இடுப்பைக் கண்டு வெண்ணெய் கட்டிபோல் இருந்ததாக எண்ணி அவரது இடுப்பைத் தொட்டுள்ளார் எனக் கூறினார்.

இதுவரை கதையை சுவாரசியமாக கேட்டுக்கோண்டிருந்த ஹவுஸ்மேட்ஸ் முகம் சற்று மாற, கதையின் ஓட்டம் மட்டும் நிற்காமல் தொடர்ந்தது. "சரி தெரியாம பன்னிட்டாரு. அந்த பொண்ணு கிட்ட மன்னிப்பு கேட்ருப்பாரு" என அனைவரும் எதிர்ப்பார்க்க, கதையின் டிவிஸ்ட்டாக இடுப்பைத் தொட்ட கோபத்தில் அவரை அறைந்த அந்த பெண், பாலச்சந்திரன் யார் என தெரிந்ததும், அவரிடம் தான் செய்தது தவறு என மன்னிப்பு கேட்டதாகவும், அதற்கு பாலசந்திரன் தான் செய்ததே தவறு என அவரும் மன்னிப்பு கேட்டதாகக் கூறி, அதன் பிறகு இருவரும் நண்பர்கள் ஆனது போல கதையை முடித்தார்.

அதைத்தொடர்ந்து, "இந்த கட்டம் தான் ரொம்ப முக்கியமான கட்டம்" என்பதைப் போல, என்னதான் தான் தவறு செய்தாலும், அதை அப்பட்டமாக எழுதும் தைரியம் வேண்டும். அது பாலச்சந்திரனிடம் இருந்துள்ளது எனக் கூறினார் பவா. மேலும், அவர் எவ்வளவு பெரிய எழுத்தாளர். அவர் நினைத்திருந்தால் இதை மறைத்திருக்கலாம். ஆனால் அதை அவர் செய்யவில்லை என பாலச்சந்திரனை பவா செல்லதுரை மேலும் பெருமைப்படுத்த, ஹவுஸ் மேட்ஸ் கொந்தளித்தனர்.

விசித்திரா, இதில் என்ன கருத்துள்ளது என பவா செல்லதுரையிடம் ஒரு காட்டு காட்ட, இந்த பக்கம் ஹவுஸ் மேட்ஸ், "அது எப்புடி திமிங்கலம்" பெரிய எழுத்தாளரா இருந்தா இடுப்ப தொடலாமா?. அவரை எப்படி இவர் பெருமைப்படுத்தலாம்?. அந்த பெண் எதற்கு மன்னிப்பு கேட்டார்? என தங்களுக்குள்ளேயே கூடி கும்மியடித்தனர்.

இதற்கு பதிலளித்த பவா செல்லதுரை "இலக்கியத்தை இல்லக்கியமாகத் தான் பார்க்க வேண்டும்" எனக் கூறி அங்கிருந்து நடையைக்கட்டினார். எப்படியோ வெங்காயம் வெட்டுவதற்கும், தோசை சுடுவதற்கும் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் ஹவுஸ் மேட்ஸ், முதன்முறையாக இலக்கிய படைப்பால் குழம்பி இருப்பது "இது நல்லா இருக்கு" என்பதைப் போல ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இனி வீட்டிற்குள் என்னென்ன வெடிக்கப்போகிறதோ என்பது அங்குதான் வெளிச்சம்.

இதையும் படிங்க: நீண்ட காத்திருப்புக்கு பிறகு லியோ படத்தின் த்ரிஷா போஸ்டர் வெளியீடு!

Last Updated :Oct 5, 2023, 5:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.