ETV Bharat / international

கம்போடியாவில் வேலை மோசடியில் ஏமாற்றப்பட்ட 60 இந்தியர்கள் மீட்பு! - Cambodia job scam

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 11:25 AM IST

indians rescued in cambodia: கம்போடியாவில் மோசடி ஏஜெண்டுகளை நம்பி வேலைக்காக சென்று ஏமார்ந்த இந்தியர்களில் 60 பேரை கம்போடியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மீட்டு முதற்கட்டமாக தாயகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மீட்கப்பட்ட இந்தியர்கள்
மீட்கப்பட்ட இந்தியர்கள் (Credit - Indian Embassy in Cambodia)

சிஹானூக்வில்: கம்போடியாவில் வேலை தேடும் இந்தியர்களுக்கு தூதரகம் சமீபத்தில் முக்கிய அறிவுரையை வழங்கி இருந்தது. அதாவது, வேலை தேடுபவர்கள் வெளியுறவு அமைச்சகத்தால் (MEA) அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டு நிறுவனங்களை மட்டுமே அணுக வேண்டும் என்று கூறியிருந்தது. மேலும், சுற்றுலா விசாவில் சென்று வேலை தேடும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் எச்சரித்திருந்தது.

இருப்பினும், போலி ஏஜெண்டுகளை நம்பியும், டூரிஸ்ட் விசாவில் வேலை தேடி பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளும் இந்தியர்கள் அங்குள்ள மோசடி முதலாளிகளிடம் சிக்கி தாய் நாட்டுக்கு திரும்ப முடியாமல் இன்னலுக்கு ஆளாகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் கம்போடியாவின் சிஹானூக்வில் பகுதியில் வேலை மோசடியால் பாதிக்கப்பட்ட இந்தியர்களை ஜின்பே-4 என்ற இடத்தில் இருந்து கம்போடிய அதிகாரிகள் வெளியேற்றியுள்ளதாக புனோம் பென்னில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

பின்னர் இந்திய தூதரகத்தின் குழுவினர் பாதிக்கப்பட்ட இந்தியர்களை கம்போடியாவின் உயர் மட்ட அதிகாரிகளின் உதவியுடன் புனோம் பென்னுக்கு மீட்டு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 60 பேர் கொண்ட குழுவை முதற்கட்டமாக தாயகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய தூதரகம், எஞ்சியவர்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதுவரை அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், அனைத்து இந்தியர்களும் சரியான வழிகாட்டல்களுடன் விரைவாக வீடு திரும்புவதற்கான பயண ஆவணங்கள் மற்றும் பிற ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, இதுகுறித்து எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ள கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகம், கம்போடியாவுக்கு வேலை நிமித்தமாக வரும் இந்தியர்கள் சட்டவிரோத இணைய குற்றங்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தியதுடன் அவசர உதவிகளுக்கு தூதரகம் மற்றும் கம்போடிய ஹாட்லைன் எண்களையும் பகிர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, இந்திய தூதரகத்தின் இத்தகைய மீட்பு நடவடிக்கையில் 360க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஏஐ குரல் என்னுடையது? அமெரிக்க நடிகை அதிருப்தி.. ஸ்கை வாய்ஸை நிறுத்திய ஓபன் ஏஐ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.