நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டப் போராட்டம் - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

author img

By

Published : Jan 8, 2022, 4:49 PM IST

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

நீட் தேர்வு முறையை முழுமையாக நீக்கிட சட்டப் போராட்டத்தினை ஒன்றிணைந்து மேற்கொள்வதென முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீட் தேர்வு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜனவரி 8) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், 10ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அனைத்துச் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் கு. செல்வப்பெருந்தகை, பாரதிய ஜனதா கட்சி சார்பில் வானதி சீனிவாசன், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஜி.கே. மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி. ராமச்சந்திரன்,

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் வீ.பி. நாகைமாலி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தி. சதன் திருமலைக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் எம். சிந்தனைச்செல்வன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ரா. ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தி. வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எம்.ஹெச். ஜவாஹிருல்லா, புரட்சி பாரதம் கட்சி சார்பில் பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் கீழ்க்காணும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்

அதில், "நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெறுவதற்கு வசதி வாய்ப்புகள் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாகவும், மருத்துவர் மாணவர் சேர்க்கையில் 12 ஆண்டுகள் படிக்கக்கூடிய பள்ளிக்கல்வியால் எவ்விதப் பயனும் இல்லை என்ற நிலையை உருவாக்கிப் பள்ளிக்கல்வி அமைப்பையே அர்த்தமற்றதாக்கும் இந்த நீட் தேர்வை மாணவர்களின் கல்விக் கனவை சிதைப்பதாக மட்டுமின்றி - அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவத்தைச் சீரழிப்பதாகவும் அமைந்துவிட்டது.

மத்திய உள் துறை அமைச்சரிடம் நாம் ஏற்கனவே அளித்த கோரிக்கையை பரிசீலிக்க அவரிடமிருந்து அழைப்பு வரப்பெற்றால் அனைத்துக் கட்சிகளின் சார்பில் அவரைச் சந்திக்க முடிவெடுக்கப்பட்டது. நாமும் நமது மாநிலமும் இன்று அடைந்துள்ள இந்த வளர்ச்சியை சமூக நீதிக்கான அரசியல், சட்டம், மக்கள் போராட்டங்களின் மூலமே பெற்றுள்ளோம்.

ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி கனவுகளைச் சிதைத்திடும், மாநில சுயாட்சித் தத்துவத்தை சீர்குலைத்திடும் நீட் தேர்வு முறையை முழுமையாக நீக்கிடத் தேவையான சட்டரீதியான நடவடிக்கைகளை மூத்த சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்த பின், தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

நீட் தேர்வின் பாதகங்களை நாட்டின் மற்ற மாநிலங்களும் உணரும் வகையில் ஒருமித்த கருத்தை உருவாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்" எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க: தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் மூலம் ரூ.97.01 கோடி மதிப்பீட்டில் கட்டடங்கள் திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.