ETV Bharat / state

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நேரில் பார்க்கனுமா? அப்ப இதை செய்யுங்க!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2024, 5:34 PM IST

Khelo India
கேலோ இந்தியா

Khelo India ticket booking: 6வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நேரு விளையாட்டு அரங்கில் நாளை தொடங்க உள்ள நிலையில் விளையாட்டு போட்டிகளை நேரில் பார்க்க பார்வையாளர்கள் முன்பதிவு செய்ய ஏதுவாக செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

சென்னை: 6வது கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தின் சென்னை, கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் ஜன.19 முதல் ஜன.31 வரை நடைபெறவுள்ளன. இதன் தொடக்க விழா சென்னை, ஜவஹா்லால் நேரு விளையாட்டு அரங்கில் ஜனவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதனை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைக்கிறார். மேலும், இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர். இந்த கேலோ இந்தியா போட்டியானது, தமிழகத்தில், சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெற உள்ளது.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து, 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சுமார் 6000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் 1600-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்க உள்ளனர். மேலும், 1000-க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்த ஆண்டு 27 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஸ்குவாஷ் அறிமுக விளையாட்டாக இடம் பெறுகிறது. இதில் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக இடம் பெற உள்ளது. இந்த போட்டிக்காக தமிழக விளையாட்டு மேம்பாட்டு வாரியம் முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு கட்டமாக கால்பந்து ரசிகர்களால் ‘மெரினா அரங்கம்’ என அழைக்கப்படும் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானம் மறுசீரமைக்கப்பட்டு உள்ளது. இப்போட்டிகளை விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நேரில் பார்வையிட வசதியாக அனுமதி சீட்டுகளை வழங்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இப்போட்டியை நேரில் காண விரும்பும் பார்வையாளர்கள் TNSPORTS (ஆடுகளம்) என்ற செயலியின் மூலமாகவும் அல்லது https://www.sdat.tn.gov.in என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் வாயிலாகவும் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதில் போட்டி நடைபெறும் மாவட்டம், விளையாட்டு மற்றும் தேதியை தேர்வு செய்து பதிவு செய்ய வேண்டும். பின்னர் தங்களது அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். நேரில் போட்டியை காண்பதற்கு செல்லும் போது பதிவிறக்கம் செய்த அனுமதி சீட்டினை அலை பேசியிலோ அல்லது அச்சிடப்பட்ட தாளிலோ கொண்டு செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சூப்பர்மேனாக மாறிய விராட் கோலி.. ஆட்டத்தையே மாற்றிய அந்த தருணம்! வைரலாகும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.