ETV Bharat / state

கந்துவட்டி கொடுமை: சிறப்பு குழுக்கள் அமைக்க வேண்டும் - சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை

author img

By

Published : Jun 16, 2021, 3:37 AM IST

SS
s

கந்துவட்டி கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாவட்ட அளவில் இதற்கென்று சிறப்பு குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும் என சமம் குடி மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் வழக்கறிஞர் சி.சே.ராஜன் கோரிக்கை

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”மதுரை மகபூப்பாளையம் அன்சாரிநகர் 7ஆவது தெருவை சேர்ந்த முஹம்மது அலி (37) என்பவர் கந்துவட்டி தொல்லை காரணமாகக் காவல்துறையினருக்கு வேண்டுகோள் வீடியோ ஒன்றை வெளியிட்டு விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் உலுக்கி உள்ளது.

தமிழகத்தில் கந்து வட்டி காரணமாகத் தற்கொலை செய்து வரும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுவும் கரோனா காலத்தில் வேலை இழந்து, ஊதிய குறைப்புக்கு உள்ளாகி அவதிப்படுவோர் ஏராளமானோர். இவர்கள் தங்கள் குடும்பச் செலவுக்குக் கந்துவட்டிக்கு கடன்வாங்குகிறார்கள். கந்துவட்டிக்காரர்களின் கொடுமைக்கு ஆளாகி இறுதியில் தற்கொலையை நாடுகிறார்கள்.

மதுரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட முகமது அலிக்கு திருமணமாகி 8 வயது மற்றும் 3 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். தற்கொலை செய்து கொண்ட முகம்மது அலி தன்னுடைய வீடியோ பதிவில் செல்வகுமார் என்பவரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கிய நிலையில் ரூ.6 லட்சம் ரூபாய் திருப்பிச் செலுத்தியும் கூடுதலாகப் பணம் கேட்டு தொல்லை செய்து வருகின்றனர். என்னால் இதைச் சுத்தமாகச் சமாளிக்க முடியவில்லை, வீட்டிற்கு வந்து மனைவி குழந்தைகளை அவதூறாகப் பேசுகிறார்கள் மிகவும் மோசமாக நடந்து கொள்கின்றனர் எனக் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய இந்தச் சாவிற்கு வழக்கறிஞர் செல்வக்குமார், ஜெயேந்திர சிங் ,காமாட்சி, மற்றும் மாரிமுத்து போன்றோர் முக்கியக் காரணம் என்றும் பிள்ளைகளை நல்லபடியாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தந்தையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

என்னோடு முடியட்டும் இந்தக் கொடுமை வேறு யாரும் இது போன்ற கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்யும் நிலை வரக்கூடாது, மாநகரக் காவல்துறை ஆணையர் அவர்களே நடவடிக்கை எடுங்கள். மக்களின் குறைகளைத் தீர்த்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்களே என்னுடைய குடும்பத்தின் குறைகளையும் தீர்த்து வையுங்கள், என்னுடைய மனைவி குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வழங்குங்கள் முதல்வரே, எனக் கண்ணீர் மல்க பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது..இது தமிழகத்திற்குப் பெரும் அவமானம்.

இதேப்போன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து கந்து வட்டி கொடுமை தாங்காமல் பலர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டு வரும் அவல நிலையைப் பார்த்து வருகிறோம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பே குடுப்பத்துடன் தீக்குளித்து உயிரிழந்த கொடூர சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன..இதனை முழுமையாகத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

கந்து வட்டிக் கொடுமையால் சிக்கித் தவிப்பவர்கள் தங்களது சொத்துக்கள், உடமைகள் ஆகியவற்றை இழந்து தவிக்கின்றனர். , அவர்களது வீட்டிலிருக்கும் பெண்கள், குழந்தைகள் எனஅனைவரும் அவமானபடுத்தப்படுவதால் அவமானம் தாங்க முடியாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்கின்றனர்.
கந்துவட்டிக்காரர்கள் தங்களது அடியாட்களைக் கொண்டு மிரட்டுவதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி மக்கள் தவித்து வரும் சூழல் நிலவி வருகிறது.

இச்சூழலில் 2003ஆம் ஆண்டுக் கொண்டுவரப்பட்ட கந்துவட்டி தடுப்புச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். முறையாகக் கண்காணிப்பு செய்யப்பட வேண்டும். குற்றவாளிகள் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.
அப்போதுதான் கந்துவட்டியால் ஏற்படும் தற்கொலை மரணங்களைத் தடுக்கமுடியும். ஆனால் சட்டத்தை முறையாக அமுல்படுத்தாத காரணத்தினால்தான் இது போன்ற துயர சம்பவங்கள் நிகழ்கின்றன.

இப்போது கரோனா தொற்றுக் காலக்கட்டத்தில் வாழ்கிறோம். இந்த ஊரடங்கு காலத்தில் வேலையிழந்து தவிக்கும் மக்கள் தாங்கள் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். பொதுமக்கள் கடன் தொல்லையால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நேரத்தில் மக்களிடம் இருந்து இ.எம்.ஐ., கடன்கள், மைக்ரோபைனான்ஸ் கடன்கள், கிரெடிட் கார்ட் கடன்கள் போன்றவற்றைக் கட்டாயப்படுத்தித் தற்போது வசூலிக்க மாட்டோம் என நிறுவனங்களை உறுதியளிக்க செய்ய வேண்டும். அவ்வாறு அடியாட்களைக் கொண்டு கட்டாயப்படுத்தி வசூலிக்க முயல்வோர் மேல் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்பதை மக்களுக்கு அரசு ,நம்பிக்கை தரும் வகையில் தெரிவிக்க வேண்டும்.

முகம்மது அலி தற்கொலைக்குத் காரணமான கந்துவட்டி நபர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து உடனடியாக அவர்கள் கைது செய்யப் பட வேண்டும்.

மேலும் இதுபோன்ற உயிரிழப்புகளும், துயரச் சம்பவங்களும் தமிழகத்தில் நடைபெறாமலிருக்கத் தமிழக அரசு கந்து வட்டி தடுப்புச் சட்டத்தைக் கறாராக அமல்படுததுவதோடு, கந்து வட்டி சம்மந்தமான புகார்களை முழுமையாக ஆய்வு செய்யவும், கண்காணிக்கவும், மக்களைக் கந்துவட்டியில் இருந்து பாதுகாக்கவும், மக்கள் இது சம்மந்தமான புகார்களை எந்த வித அச்சமும் இன்றி அரசுக்கு தெரிவிக்கவும் மாவட்ட அளவில் சிறப்புக் குழுக்களை அரசு உடனடியாக அமைக்க வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.