ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்ல விவகாரத்தில் இன்று தீர்ப்பு!

author img

By

Published : Nov 24, 2021, 7:45 AM IST

Updated : Nov 24, 2021, 7:58 AM IST

ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லம் விவகாரத்தில் இன்று தீர்ப்பு!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் அரசுடமையாக்கியதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (நவம்பர் 24) தீர்ப்பளிக்க உள்ளது.

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்தது. அதனைச் செயல்படுத்தும்விதமாக வேதா நிலையம், அங்குள்ள அசையும் சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டன.

இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அதேபோல வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்குத் தொடரப்பட்டது.

வேதா நிலையத்துக்கு சுமார் ரூ.68 கோடி இழப்பீடு

இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி சேஷசாயி விசாரித்தார். அப்போது தீபா, தீபக் தரப்பில் பேசிய வழக்கறிஞர், "தனிநபர் சொத்துகளைக் கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லாததால், வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தைச் செல்லாது என அறிவித்து நினைவில்லமாக மாற்ற தடைவிதிக்க வேண்டும்.

மேலும் வாரிசுகளாக அறிவிக்கப்பட்டோரிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டதை எதிர்த்த பின்னரும், 67 கோடியே 90 லட்சம் ரூபாய் இழப்பீடை சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் நிலம் கையகப்படுத்துதல் அலுவலர் செலுத்தியது தவறு. நிலத்தை முறையாக மதிப்பீடு செய்யாமல் சுமாராக 68 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.

பின்னர் அரசுத் தரப்பில் பேசிய வழக்கறிஞர், "வேதா நிலையத்தைக் கையகப்படுத்தும் முன்பே அனைத்துத் தரப்பு கருத்துகளும் கேட்டறியப்பட்டன. பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை கையகப்படுத்தி நினைவு இல்லமாக மாற்றவே அரசு நடவடிக்கை எடுத்தது. அரசியல், தனிப்பட்ட ரீதியாகப் பல்வேறு பிரச்சினைகளை ஜெயலலிதா எதிர்கொண்டபோது, எதிர்மனுதாரர்கள் உறுதுணையாக இல்லை.

ஒருவர் குடியிருந்த வீட்டை நினைவில்லமாக மாற்ற சுற்றுச்சூழல் சான்றிதழ் எதுவும் தேவையில்லை” என வாதிட்டார். பின்னர் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்குகளின் மீதான தீர்ப்புகளைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இந்நிலையிலேயே இந்த வழக்குகளில் இன்று பிற்பகல் 2 மணிக்குத் தீர்ப்பளிக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: Special DGP Case: முன்னாள் சிறப்பு டிஜிபி கோரிக்கை நிராகரிப்பு

Last Updated :Nov 24, 2021, 7:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.