ETV Bharat / state

பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் ஜெயம் ரவியின் 'ஜீனி' படம்!

author img

By

Published : Jul 5, 2023, 5:12 PM IST

Updated : Jul 5, 2023, 6:26 PM IST

Etv Bharat
பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் ஜெயம் ரவியின் 'ஜீனி' படம்!

ஜெயம் ரவியின் 'ஜீனி' படத் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது.

பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் ஜெயம் ரவியின் 'ஜீனி' படம்!

சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கும் படத்திற்கு, 'ஜீனி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இயக்குநர் அர்ஜுனன் ஜூனியர் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஜீனி'. இதில் ஜெயம் ரவி, கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி, தேவயானி உள்ளிட்டப் பலர் நடிக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு, 'இசைப்புயல்' ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் தயாராகும் 'ஜீனி', வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் 25வது படம் என்பதால், மிக பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாராவதுடன், தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ள நிலையில் வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆக்ஷன் கலந்த ஃபேண்டஸி படமாக இது உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் ஜெயம் ரவி இணையும் மூன்றாவது படமாகும். கோமாளி, போகன் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இப்படமும் அதே அளவில் பிரமாண்டமான வெற்றியைப் பெறும் என்று ஜெயம்ரவி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

பின்னர் பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறும்போது, ''இப்படம் மிகப் பெரிய அளவில் எடுக்கப்பட உள்ளது'' என்றார். சிம்பு படம்‌ குறித்த கேள்விக்கு, ''சிம்புவுக்கு எனது தயாரிப்பில் நடிக்க முன்பணம் கொடுத்துள்ளேன். ராஜ்கமல் நிறுவனத்தில் சிம்பு நடிப்பது குறித்து எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. ராஜ்கமல் நிறுவனமும் வேல்ஸ் நிறுவனமும் ஒன்றுதான். இது அண்ணன், தம்பி பிரச்னை சீக்கிரம் சரியாகிவிடும்'' என்றார்.

மேலும் நடிகர் சங்கம் கட்டடம் குறித்த கேள்விக்கு, ''நான் நடிகர் சங்க கட்டடத்திற்கு நிறைய நிதி கொடுத்துள்ளேன். அந்த வழியாக போகும் போது சற்று வருத்தமாக தான் இருக்கும். புதிய அணி வந்துள்ளது. நிச்சயம் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்'' என்றார்.

ஜெயம் ரவியின் நடிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் முதல் படம் 'ஜீனி’ என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Thangalaan Wrap: தங்கலான் படப்பிடிப்பு நிறைவு - போட்டோ பகிர்ந்த விக்ரம்!

Last Updated :Jul 5, 2023, 6:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.