சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்த பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுக தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கிய ஓபிஎஸ் தரப்பிற்கு, இங்கு வர எந்த உரிமையும் இல்லை. அதிமுகவிற்கும் ஓபிஎஸ்ஸிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் வருவது என்பது சட்டத்துக்கு புறமானது. அதை தடுத்து அதிமுக அலுவலகத்திற்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்துள்ளோம். மனுவை வாங்கிக் கொண்டு, நடவடிக்கை எடுப்பதாக டிஜிபி கூறினார்.
இப்பொழுது டிஜிபி இடம் மனு கொடுத்துள்ளோம். அடுத்தபடியாக மாநகர காவல் ஆணையாளரிடமும் மனு கொடுப்போம். அதிமுகவில் ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. பொதுக்குழு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. அதை மீறியும் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக் கொள்வது சட்டத்தை மீறும் செயலாகும். சசிகலா, வைத்திலிங்கம் சந்திப்பானது, சாக்லேட் கொடுத்து அமமுகவிற்கு அழைக்கும் செயலாகும். வைத்திலிங்கத்திற்கு அதிமுகவில் வேலையில்லாததால் அமமுகவிற்கு சாக்லேட் கொடுத்து அழைக்கின்றனர்.
அதிமுக அலுவலகம் ஆவணங்கள் திருடு போன வழக்கில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்த பொழுதுதான் சிபிசிஐடி ஆய்வு நடத்தியது. அதிமுக அலுவலகத்தில் நடந்த வன்முறைச் சம்பவம் குறித்து அனைத்து ஆதாரங்களையும் கொடுத்துள்ளோம். ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுகவில் இருக்கக்கூடிய கிளைக் கழக தொண்டன் கூட திமுகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட மாட்டார்கள்.
இடைக்கால பொதுச்செயலாளர் திமுகவின் 10 எம்.எல்.ஏக்கள் பேசுவதாக கூறியுள்ளார். அதற்கு ஆர்.எஸ்.பாரதி 50 எம்.எல்.ஏக்கள் பேசுவதாகத் தெரிவித்தார். அவர் ஆர்.எஸ்.பாரதி கிடையாது, 'ரீல் சுற்றும்' பாரதி. திமுகவும் ஓபிஎஸ்ஸும் கை கொடுத்துக்கொண்டார்கள்.
அதனால்தான் ஓபிஎஸ் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் திமுகவின் 'பி டீம்' ஆக செயல்படுகின்றனர். இணையதளத்தில் இருக்கக்கூடிய எம்எல்ஏக்களின் பட்டியலை தான் ஆர்.எஸ்.பாரதி வெளியிடுவார்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:ஈரோட்டில் இயங்கிய போலி மதுபான ஆலை - கும்பகோணத்தில் பிடிபட்ட வாகனம்