சென்னை: நெய்வேலியில் உள்ள என்.எல்.சி நிறுவனம் தனது 2ஆவது பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு விவசாயிகளும், பல்வேறு அமைப்புக்களை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு நிறுவனமான என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்த அனுமதி வழங்கியதை திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளே ரசிக்கவில்லை. இது தொடர்பாக நேற்றைய (மார்ச் 10) தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சிபிஐ, சிபிஎம், விசிக போன்ற கட்சி தலைவர்கள் சந்தித்துள்ளனர்.
என்.எல்.சி விவகாரம் தொடர்பாக பல முக்கியமான கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வைத்துள்ளனர். அதில், நிலத்தை கையகப்படுத்துவதை நிறுத்த கோரிக்கை வைக்கவில்லை என்று தெரிகிறது. அதோடு நிலத்தை கொடுக்கும் விவசாயிகளுக்கு அரசு வேலை தர வேண்டும் எனவும் கடந்த ஆண்டு நிலம் கொடுத்தவர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை. அதனை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். காவல்துறை அதிகாரிகளை வைத்து விவசாயிகளை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்த கூடாது என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். அதிமுகவை சேர்ந்த கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் போராடி கொண்டிருக்கும் விவசாயிகளை சந்திக்க சென்ற போது அவர் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தின் நில அபகரிப்பை கண்டித்து பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இது குறித்து சென்னையில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "திமுக அரசை பொறுத்தவரையில் ஒரு போராட்டம் கூட ஜனநாயக வழியில் நடத்த முடியாது. போராட்டம் என்று அறிவித்தாலே, போராட்டக்காரர்களை சிறையில் அடைக்கின்றனர். சமூக வலையதளத்தில் அரசு எதிராக கருத்து கூறினால், உடனடியாக கைது செய்கின்றனர். 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் நில எடுப்பு என்பது எதுவும் கிடையாது. ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தோம். அப்போது கூட என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் எடுக்க விடவில்லை.
மத்திய அரசு கொண்டு வரும் இந்த திட்டத்தை திமுக அரசு எதிர்ப்பதற்கு வலிமை இருக்கிறதா?. என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் எடுப்பதை விவசாயிகள் எதிர்க்கும் சூழலில் எதற்கு திமுக அரசு அனுமதி கொடுத்துள்ளது. மத்திய அரசு நிறுவனமான என்.எல்.சிக்கு திமுக துணை போகிறது என்றால், திமுக தான் மத்திய அரசுக்கு கொத்தடிமை வேலை செய்து கொண்டிருக்கிறது. பொதுமக்கள் பாதிக்கப்பட கூடிய விவகாரங்கள் அதிமுக தான் முதல் குரல் கொடுக்கும். என்.எல்.சிக்கு எதிராக போராடிய விவசாயிகளை சந்திக்க சென்ற கடலூர் மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவனை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்" என கூறினார்.