உலக தமிழ் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு!

author img

By

Published : Jan 25, 2023, 4:23 PM IST

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஷார்ஜாவில் நடைபெறும் 11-வது உலக தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை: உலக அளவில் தமிழ் மொழிக்கு என தனி சிறப்பையும், கவனிப்பையும் உருவாக்கும் விதமாக தமிழ் அறிஞர் தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்களின் பெருமுயற்சியில் உலக தமிழ் ஆராய்ச்சி மன்றம் கடந்த 1964ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் உருவாக்கப்பட்டது. உலக தமிழர்களை ஒன்றிணைக்கவும், அவரது ஆராய்ச்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத்தமிழ் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது.

இதுவரை 25-க்கும் மேற்பட்ட மாநாடுகள் நடைபெற்று இருக்க வேண்டிய நிலையில், பல்வேறு பிரச்னைகள் காரணமாக 10 மாநாடுகள் மட்டுமே நடத்தப்பட்டு உள்ளது. முதலாவது மாநாடு கடந்த 1966ஆம் ஆண்டு, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. தொடர்ந்து 2-வது உலக தமிழ் மாநாடு தமிழ்நாட்டில், அதுவும் சென்னையில் கடந்த 1968ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் அண்ணாதுரையின் முயற்சியில் நடைபெற்றது.

அந்த மாநாட்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அப்போது முதலமைச்சர் அண்ணாதுரை அமைச்சரவையில் பொதுப் பணித்துறையை கவனித்து வந்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருக்கும்போது 1981ஆம் ஆண்டு 5-வது மாநாடு மதுரையிலும், ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் 1995ஆம் ஆண்டு தஞ்சாவூரில் 8-வது உலக தமிழ் மாநாடும் நடைபெற்றது.

தனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறையாவது உலக தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆசைப்பட்டதாக கூறப்படும் நிலையில் அதற்கு போதிய அனுமதி கிடைக்காமல் கடந்த 2010ஆம் ஆண்டு உலக தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்தினார். இந்நிலையில் 11-வது உலக தமிழ் மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நகரில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.

உலக தமிழ் மாநாட்டின் கால சுவடுகள்
உலக தமிழ் மாநாட்டின் கால சுவடுகள்

தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 100 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 500 தமிழறிஞர்கள், லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுளளது. சுமார் 25 கோடி ரூபாய் செலவில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் ஷார்ஜா அரச குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 2025ஆம் ஆண்டு 12-வது உலக தமிழ் மாநாட்டை தமிழ்நாட்டின் திருச்சியில் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு அரசு தரப்பில் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்துவார் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா நினைவிடங்களை மக்கள் பார்க்க நாளை தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.